விவசாயி வீட்டில் 26 பவுன் நகைகள் கொள்ளை; தடயங்களை மறைக்க தீ வைப்பு

தேவகோட்டை அருகே விவசாயி வீட்டில் 26 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் தடயங்களை மறைக்க கொள்ளை நடந்த வீட்டில் கொள்ளையர்கள் தீ வைத்து கொளுத்தி உள்ளனர்.
விவசாயி வீட்டில் 26 பவுன் நகைகள் கொள்ளை; தடயங்களை மறைக்க தீ வைப்பு
Published on

காரைக்குடி,

தேவகோட்டை அருகே விவசாயி வீட்டில் 26 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் தடயங்களை மறைக்க கொள்ளை நடந்த வீட்டில் கொள்ளையர்கள் தீ வைத்து கொளுத்தி உள்ளனர்.

நகைகள் கொள்ளை

தேவகோட்டை அருகே உள்ள நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமிநாதன். விவசாயி. இவர் சம்பவத்தன்று இரவு அருகே உள்ள கோட்டூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக தனது குடும்பத்துடன் சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 26 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்றனர்.

மேலும் அந்த வீட்டில் கொள்ளையடித்த சம்பவத்தின் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக கொள்ளையாகள் வீட்டின் உள்ளே தீ வைத்து கொளுத்தி உள்ளனர். இதில் வீட்டில் இருந்த துணிகள், பாத்திரங்கள், மின்சாதன பொருட்கள் உள்ளிட்டவைகள் எரிந்து சாம்பலானது. இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த தேவகோட்டை தீயணைப்பு படை வீரர்கள் தீ மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

பொதுமக்கள் பீதி

இதேபோல் இந்த சம்பவம் நடைபெற்ற வீட்டின் அருகில் வசித்து வரும் பெருமாள் என்பவரது வீட்டு கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. நகைகளை வேறு ஒரு இடத்தில் வைத்திருந்ததால் அவை தப்பின.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவலறிந்த தேவகோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். சமீப காலமாக தேவகோட்டை பகுதியில் வீடுகளில் நடைபெற்று வரும் தொடர் திருட்டு சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com