

விழுப்புரம்,
விழுப்புரம் காகுப்பம் பொய்யபாக்கம் சாலை பகுதியை சேர்ந்தவர் கனகசபை மகன் சண்முகம் (வயது 45). இவர் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம், தனது வேலை விஷயமாக சென்னை சென்றார்.
பின்னர் அவரது குடும்பத்தினர் மாலையில் வீட்டை பூட்டிவிட்டு திருச்சியில் உள்ள உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்று விட்டனர். இதனிடையே சென்னை சென்றிருந்த சண்முகம் நேற்று அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பினார்.
நகை- பணம் கொள்ளை
அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம், டிவி. ஆகியவை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தொடர்ந்து, மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. அந்த நாய், கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கொள்ளைபோன நகை-பணத்தின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சமாகும்.
இதுகுறித்த புகாரின்பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.