ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பையொட்டி கடும் குளிரையும் பொருட்படுத்தாது பக்தர்கள் குவிந்தனர்.நேற்று மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் அருள் பாலித்தார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு
Published on

ஸ்ரீரங்கம்,

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருடத்திற்கு 322 உற்சவம் மற்றும் விழாக்கள் நடைபெற்றாலும் அவை எல்லாவற்றிலும் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி விழாவாகும். பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா மிக விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 18-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 19-ந்தேதியில் இருந்து நம்பெருமாள் தினமும் காலை வெவ்வேறு சிறப்பு அலங்காரங்களில் புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தார்.

மோகினி அலங்காரம்

பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் காலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். ஆழ்வார்கள், பக்தர்கள் புடைசூழ அர்ச்சுன மண்டபத்தை அடைந்த நம்பெருமாள் அங்கு மாலை 5 மணி வரை பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் கருடமண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். மோகினி அலங்காரத்தில் நம்பெருமாளை தரிசித்தால் மாயையில் இருந்து விடுபடுவதற்கான பலன் கிடைக்கும் என ஐதீகமாக நம்பப்படுவதால் நேற்று இரவு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

இன்று சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நடக்கிறது. பரமபதவாசல் எனும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வதற்காக நம்பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளி மாலை மற்றும் திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பாடாகிறார். சரியாக 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. சொர்க்கவாசலை நம்பெருமாள் கடந்து பக்தர்கள் வெள்ளத்தில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள மணல் வெளியில் அதிகாலை 5.15 மணிக்கு காட்சியளிக்கிறார். அப்போது அங்கு திரண்டிருக்கும் பக்தர்கள் மத்தியில் நம்பெருமாள் சுற்றி சுற்றி சேவை சாதிப்பார்.

ஆயிரங்கால் மண்டபம்

இதனை தொடர்ந்து சாதரா மரியாதை அளிக்கப்பட்ட பின்னர் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் காலை 7.30 மணிக்கு எழுந்தருள்கிறார். காலை 7.30 மணி முதல் 8.15 மணி வரை நம்பெருமாளுக்கு அலங்காரம் செய்ய திரையிடப்படும். தொடர்ந்து காலை 8.15 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் நம்பெருமாளை சேவிக்க அனுமதிக்கப்படுவார்கள். மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அரையர் சேவை நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் அதிகாலை 1.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். நம்பெருமாள் கடந்து செல்லும் சொர்க்கவாசல் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி வரை திறந்து இருக்கும். மூலவரை முத்தங்கியில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தரிசிக்கலாம்.

பக்தர்கள் குவிந்தனர்

சொர்க்கவாசல் திறப்பையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத் தாமல் கோவில் வளாகத்தில் குவிந்தனர். முக்கிய பிரமுகர்கள் மற்றும் சிறப்பு அனுமதி அட்டை பெற்று இருந்தவர்கள் கோவிலுக்குள் அதற்காக அமைக்கப்பட்டிருந்த தனி பாதைகள் வழியாக செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசனத்திற்காக வந்த பக்தர்களும் இரவு 10 மணி முதலே நீண்ட வரிசையில் சாமி தரிசனத்திற்காக காத்து நின்றனர். சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பக்தர்கள் வசதிக்காக திருச்சி மத்திய பஸ் நிலையம் மற்றும் சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் திருச்சி மாவட்டத்தில் இன்று உள்ளூர் அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன் தலைமையில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com