நண்பர்களுடன் குளிக்க சென்ற செங்கல் சூளை உரிமையாளர் மிருகண்டா அணை நீரில் மூழ்கி சாவு

மிருகண்டா அணையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற செங்கல் சூளை உரிமையாளர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
நண்பர்களுடன் குளிக்க சென்ற செங்கல் சூளை உரிமையாளர் மிருகண்டா அணை நீரில் மூழ்கி சாவு
Published on

கலசப்பாக்கம்,

கலசப்பாக்கம் அருகே மேல்சோழங்குப்பம் பகுதியில் மிருகண்டா அணை உள்ளது. இந்த அணையில் தற்போது 22 அடி உயரம் தண்ணீர் உள்ளது.

இந்த நிலையில் மேல்சோழங்குப்பம் காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளரான வெங்கடேசன் (வயது 21), தனது நண்பர்கள் ராஜீவ்காந்தி, விஜய், சின்னப்பா ஆகியோருடன் மிருகண்டா அணைக்கு குளிக்க சென்றார். அனைவரும் குளித்துக் கொண்டிருக்கும் போது வெங்கடேசன் அணையில் ஒரு பகுதியில் 100 அடி உயரத்தில் இருந்து தண்ணீரில் குதித்துள்ளார்.

அப்போது அவர் தண்ணீரில் மூழ்கி சேற்றில் சிக்கிக் கொண்டார். தண்ணீருக்குள் சென்ற வெங்கடேசன் வெளியே வராததால் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து போளூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், வெங்கடேசனை பிணமாக மீட்டனர். சம்பவ இடத்திற்கு கடலாடி போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வெங்கடேசன் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com