“ஏழைகளை ஓட்டு வங்கியாக கருதி காங்கிரஸ் துரோகம் செய்கிறது” - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ஏழைகளை ஓட்டு வங்கியாக கருதும் காங்கிரஸ் கட்சி, தேர்தலுக்கு பிறகு ஏழைகளுக்கு துரோகம் செய்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
Published on

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. இதையொட்டி, அங்குள்ள காலாஹந்தி மாவட்டம் பவானிபட்னாவில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

5 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த பிரதான சேவகனை நீங்கள் கொண்டு வந்தீர்கள். அன்றிலிருந்து ஒரு நாள் கூட நான் விடுமுறை எடுக்கவில்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் மக்களுக்கு சேவை செய்ய பயன்படுத்தினேன்.

பிரச்சினைகளை தீர்த்து, மாற்றம் உருவாக்க முயன்றேன். இவற்றுக்கெல்லாம் நீங்கள் அளித்த நம்பிக்கையே காரணம். உங்கள் ஆசியால்தான் இதை சாதித்தேன். இந்த பெருமை உங்களையே சாரும்.

காங்கிரசும், இந்த மாநிலத்தை ஆளும் பிஜூ ஜனதாதளம் கட்சியும் ஒவ்வொரு தேர்தலிலும் ஏழைகளை ஓட்டு வங்கிகளாகவே கருதுகின்றன. தேர்தல் முடிந்தவுடன் அதே ஏழைகளுக்கு துரோகம் செய்கின்றன. ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்க சதி செய்கின்றன.

நவீன் பட்நாயக் அரசு, சுரங்க மாபியாவையும், நிதிநிறுவன மோசடி கும்பலையும் பாதுகாக்கிறது. இப்படிப்பட்ட அரசு வேண்டுமா? அல்லது ஏழைகளை பாதுகாக்கும் காவலாளி வேண்டுமா?

பொது வினியோக துறையில் ஊழலை ஒழித்து எனது அரசு சாதனை படைத்துள்ளது. போலி ரேஷன் கார்டுகள் மூலம் 8 கோடி இடைத்தரகர்கள், மானிய பணத்தை சுரண்டி வந்தனர். அந்த கார்டுகளை ஒழித்ததால், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி மிச்சமாகி உள்ளது. இந்த செயலால் ஏழைகள் பலனடைந்தனர்.

இதனால் தங்களுக்கு அச்சுறுத்தல் என்று கருதிய மெகா கூட்டணி கட்சிகள், எனது அரசை அகற்ற கைகோர்த்துள்ளன. அவர்களின் முயற்சி பலிக்காது.

ஏழைகளுக்காக அரசு ஒரு ரூபாய் ஒதுக்கினால், அதில் 15 காசுதான் அவர்களை சென்றடைகிறது என்று ராஜீவ் காந்தி கூறினார். ஆனால் அதை தடுக்க காங்கிரஸ் எதுவுமே செய்யாமல், ஏழைகளை இடைத்தரகர்கள் கொள்ளையடிக்க அனுமதித்தது.

ஒடிசா மாநிலத்தில் விரைவான வளர்ச்சியை ஏற்படுத்த ஒடிசா மாநில அரசு ஒத்துழைக்க மறுத்து விட்டது. மத்திய அரசு திட்டங்கள் மூலமாகவே வளர்ச்சியை ஏற்படுத்தினேன்.

இந்த மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால், கடந்த 70 ஆண்டுகளில் நடக்காத நல்ல விஷயங்கள், அடுத்த 5 ஆண்டுகளில் நடக்கும். இவ்வாறு மோடி பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com