ரஷியாவில் 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி; 15-ந் தேதி செலுத்த ஏற்பாடு

ரஷியாவில் 300 தன்னார்வலர்களுக்கு வரும் 15-ந் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Published on

மாஸ்கோ,

உலகின் அனைத்து நாடுகளையும் கதி கலங்க வைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்று, ரஷியாவையும் விடவில்லை. அங்கு இந்த வைரஸ் தொற்று 6 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 ஆயிரத்து 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்த நிலையில் ரஷியாவில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ரஷிய வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி மையமான வெக்டரின் தலைவர் ரினாட் மக்ஸ்யுடோவ் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் சோதனையை 15-ந் தேதி தொடங்கி விடலாம் என எதிர்பார்க்கிறோம். 300 தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும். இந்த தன்னார்வலர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். அவர்கள் எங்களது தேவைகளை நன்றாகவே பூர்த்தி செய்கிறார்கள்.

இந்த தடுப்பூசியின் முதல் கட்ட பரிசோதனைகள் செப்டம்பர் மாதம் முடிந்து விடும். அதன்பின்னர் இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, நோய் எதிர்ப்பு திறன் கொண்டது என்பது நிரூபிக்கப்பட்டு விட்டால், அதன் பதிவு தொடங்கி விடும்.

பதிவுக்கு பிந்தைய காலகட்டத்தில்கூட தன்னார்வலர்களின் ஆரோக்கியத்தை கண்காணிப்போம் என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வெக்டர் அமைப்பு, கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் தலைவராக திகழ்வதாக ரஷிய துணைப்பிரதமர் டட்யானா கோலிகோவா பாராட்டி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com