டெல்லியில் மேலும் ஒரு வாலிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: பொது நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

டெல்லியில் மேலும் ஒரு வாலிபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதன் மூலம் நாடு முழுவதும் இந்த வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. தொடரும் கொரோனா பரவலால் பல்வேறு பொது நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
Published on

புதுடெல்லி,

சீனாவின் உகான் நகரில் தோன்றிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அந்த நாட்டை மட்டுமின்றி அகில உலகத்தையும் பெரும் அல்லலுக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் நாளும் அதிகரித்து வருவதால் ஒட்டுமொத்த உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

இப்படி உலகை தன் கொடூர கரங்களுக்குள் கொண்டு வந்திருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. டெல்லி, தெலுங்கானா போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என நேற்று முன்தினம் வரை 30 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக டெல்லியை சேர்ந்த மேலும் ஒரு வாலிபருக்கு நேற்று வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருக்கும் இவரையும் சேர்த்து இந்தியாவில் கொரோனா தாக்கியவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்து விட்டது.

25 வயதுடைய அந்த வாலிபர் தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கு சமீபத்தில் சென்று வந்தவர் ஆவார். இவரது மனைவி, குழந்தைகள், பெற்றோர் உள்பட குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன. அந்தவகையில் அனைத்து வெளிநாடுகளில் இருந்தும் வரும் பயணிகளை பரிசோதனை செய்யுமாறு விமான நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுவரை 21 விமான நிலையங்களில் செய்யப்பட்டு வந்த இந்த பணிகள் தற்போது 30 நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. வைரஸ் தடுப்பு, எதிர்ப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதார அதிகாரிகளுக்கு நேற்று ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட்டது. மத்திய சுகாதாரத்துறை மற்றும் உலக சுகாதார அமைப்பு சார்பில் டெல்லியில் நடத்தப்பட்ட இந்த பயிற்சியில் மாநிலம், ரெயில்வே, ராணுவம், துணை ராணுவப்படைகளை சேர்ந்த 280 அதிகாரிகள் பங்கேற்றனர்.

மத்திய அரசு நிறுவனங்களில் ஊழியர்களின் வருகைப்பதிவுக்கான நடைமுறையில் இருந்த பயோ மெட்ரிக் முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதற்கு பதிலாக முந்தைய வருகைப்பதிவேடு முறை மீண்டும் கொண்டு வரப்பட்டு உள்ளது.

டெல்லியில் கொரோனா வைரசில் இருந்து குழந்தைகளை தற்காத்துக்கொள்வதற்காக வருகிற 31-ந்தேதி வரை அனைத்து அங்கன்வாடி மையங்களையும் மூடுமாறு முதல்-மந்திரி கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார். அங்கு ஏற்கனவே தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஹோலி பண்டிகையையொட்டி நாடாளுமன்றத்துக்கு 10-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டு உள்ளது. கொரோனா பீதி காரணமாக 11-ந்தேதி முதல் நாடாளுமன்றத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என மக்களவை செயலகம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் கொரோனா பீதி காரணமாக பல்வேறு பொது நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 51-வது நிறுவன தினத்தையொட்டி வருகிற 13-ந்தேதி டெல்லி அருகே உள்ள காசியாபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மெகா அணிவகுப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

மேலும் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் நடத்த இருந்த சிறப்பு நிகழ்ச்சி ஒன்றும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் பின்னர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதைப்போல மத்திய பிரதேசத்தின் இந்தூரில் வருகிற 27 முதல் 29-ந்தேதி வரை நடைபெற இருந்த சர்வதேச இந்திய பிலிம் அகாடமி விருது விழாவும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com