அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய 4-வது வார்டில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோரி தி.மு.க. பிரமுகர்கள் வாக்குவாதம்

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் 4-வது வார்டில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரி தி.மு.க., அ.தி.மு.க. பிரமுகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

கன்னியாகுமரி,

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தில் 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பா.ஜனதா சார்பில் பால்தங்கம், காங்கிரஸ் சார்பில் ஜெனிதா, தே.மு.தி.க. சார்பில் சல்வராணி, நாம் தமிழர் கட்சி சார்பில் இனிதா, சுயேட்சையாக புஷ்பலதா, சொரூபராணி, ஜயகலா ஆகியோர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை நேற்று கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

இதற்கிடையே பா.ஜனதா சார்பில் வாக்கு எண்ணும் மையத்தில் அமர்ந்திருந்த முகவர்கள் வெளியே வந்து பால்தங்கம் 50 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கூறினர். ஆனால், காங்கிரஸ் சார்பில் அமர்ந்திருந்த முகவர்கள் வெளியே வந்து, இருவரும் சம எண்ணிக்கையில் வாக்கு பெற்றுள்ளதாகவும், எனவே மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கூறினர்.

வாக்குவாதம்

இதற்கிடைய வெளியே திரண்டிருந்த தி.மு.க. பிரமுகர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் புகுந்து அதிகாரிகளிடம் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அ.தி.மு.க. பிரமுகர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்து பா.ஜனதா வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால், அ.தி.மு.க., தி.மு.க. பிரமுகர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சன்று இருதரப்பினரையும் வெளியே அனுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, வருவாய் அதிகாரி ரேவதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானதால் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துமாறு கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, இரவு 9 மணிக்கு மேல் மறு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் பா.ஜனதா வேட்பாளர் பால்தங்கம் 1238 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ஜெனிதா 1235 வாக்குகளும் பெற்றனர். அதன்படி பா.ஜனதா வேட்பாளர் 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com