திரு.வி.க.நகர்,
சென்னை மதுரவாயல் அய்யாவு நகரைச் சேர்ந்தவர் விக்னி நாகநந்தினி (வயது 26). இவருக்கும், பண்ருட்டியைச் சேர்ந்த செந்தில்நாதன்(30) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்பு செந்தில்நாதன், தனது தாய், தங்கையுடன் மதுரவாயல் வந்து மனைவியுடன் வசித்து வந்தார்.
கடந்த 25ந் தேதி செந்தில்நாதன் வரதட்சணை கேட்டு தனது மனைவியை கொடுமைப்படுத்தியதாகவும், வரதட்சணை தரமுடியாவிட்டால் தற்கொலை செய்துகொள்ளும்படி திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த நாகநந்தினி, வீட்டின் 2வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேலும் இதுபற்றி நாகநந்தினி கொடுத்த புகாரின் பேரில் செந்தில்நாதன், அவரது தாய் வசந்தகுமாரி மற்றும் சகோதரி சீதாலட்சுமி ஆகியோர் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பண்ருட்டியில் தலைமறைவாக இருந்த செந்தில்நாதனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.