விக்கிரமசிங்கபுரம்,
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் முதலியார்பட்டி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 42). சொந்தமாக டிப்பர் லாரி வைத்து தொழில் செய்து வந்தார். நேற்று இவர் தனது 2-வது மகள் சுவிட்சா (10)வுடன் ரேடியோ ஒன்றை ரிப்பேர் பார்ப்பதற்காக அம்பைக்கு மோட்டார்சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அகஸ்தியர்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே மெயின் ரோட்டில் வந்தபோது நாய் ஒன்று திடீரென குறுக்கிட்டதால் ரவி பிரேக் போட்டு மோட்டார்சைக்கிளை நிறுத்தினார்.
அப்போது இவருக்கு பின்னால் செங்கல் லோடு ஏற்றி வந்த டிராக்டர், ரவியின் மோட்டார்சைக்கிளின் மீது மோதியது. இதில் டிராக்டரின் அடியில் தந்தை, மகள் இருவரும் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்ததும் விக்கிரமசிங்கபுரம் போலீசார் விரைந்து வந்தனர். ரவி, சுவிட்சா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து போன சுவிட்சா விக்கிரமசிங்கபுரம் பாபநாசம் மெயின் ரோட்டில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். ரவிக்கு மாரிசெல்வி (38) என்ற மனைவியும், பிரியதர்ஷிணி (13) என்ற மகளும் உள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.