ஐதராபாத் பொறியாளர் - மத்திய பிரதேச விவசாயி பாகிஸ்தானில் கைது

பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக ஐதராபாத் பொறியாளர், மத்திய பிரதேச விவசாயி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
Published on

லாகூர்

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாக இரண்டு இந்தியர்களை பாகிஸ்தான் போலீசார் கைது செய்து உள்ளனர். ஒருவர் தெலுங்கானா ஐதராபாத்தை சேர்ந்தவர். மற்றவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

கடந்த வாரம் பஞ்சாபின் பஹவல்பூரில் உள்ள சோலிஸ்தான் பாலைவனப் பகுதியில் ஐதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பிரசாந்த் மைதம் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி துர்மி லால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்று பாகிஸ்தான் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

கடந்த நவம்பர் 14 ஆம் தேதி பாகிஸ்தானுக்குள் சட்டத்திற்கு புறம்பாக நுழைந்த சட்டத்தின் கீழ் பஹவல்பூர் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். எந்தவொரு அடையாள ஆவணங்களும், விசா மற்றும் பாஸ்போர்ட் போன்ற முறையான ஆவணங்களும் இல்லாமல் அவர்கள் எல்லை தாண்டியதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

பிரசாந்த் துருக்கியில் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் வழியாக அங்கு செல்வதாக கூறியதாகவும், துர்மி லால் எல்லையைப் பார்க்க விரும்பினார் என்றும் தவறுதலாக பாகிஸ்தான் எல்லையை கடந்து சென்றதாக தெரிவித்தாக கூறப்படுகிறது.

பஹவல்பூர் நீதித்துறை நீதிபதி யஸ்மான் உள்ளூர் போலீசாரை முல்தானுக்குச் சென்று இரு இந்தியர்களையும் மத்திய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டு உள்ளார். இருவரும் இப்போதும் பஹவல்பூர் போலீசாரின் காவலில் உள்ளனர்.

பிரசாந்த் அதிர்ஷ்டசாலி, அவர் இங்கு கைது செய்யப்பட்டார். அவர் பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்குச் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது, என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

உரிய செயல்முறை பின்பற்றப்பட்ட பின்னர் இருவரும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய தூதரகம் போலீசாரை தொடர்பு கொண்டு திருப்பி அனுப்பும் பணியைத் தொடங்க வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரசாந்த் காணவில்லை என அவரது தந்தை ஐதராபாத்தின் ராவ் மாதபூர் போலீசில் புகார் அளித்தார்,

இதுகுறித்து பாபு ராவ் காணாமல் போன தனது மகன் செய்தி சேனல்கள் மூலம் பாகிஸ்தானில் இருப்பதை அறிந்தேன். ஐதராபாத்தில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் புதிய வேலையைத் தொடங்குவதற்கு முன்பு அவர் ஒன்றரை ஆண்டுகளாக பெங்களூரில் பணிபுரிந்தார் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com