

சேந்தமங்கலம்,
கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரியூர்நாடு ஊராட்சி அரியூர் கஸ்பா கிராமத்திற்கு புதியதாக சாலை வசதி கேட்டு அப்பகுதியினர் தேர்தல் புறக்கணிப்பு செய்தனர். மேலும் அங்குள்ள வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதையறிந்த கொல்லிமலை தாசில்தார் ராஜ்குமார் மற்றும் போலீசார், வருவாய் துறையினர் அங்கு சென்று 2 நாட்களாக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் நேற்று அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலர் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை ஓட்டுப்போட சொல்லி வலியுறுத்தினர். ஆனால் மலைவாழ் மக்கள் பேச்சுவார்த்தையை ஏற்காமல் போராட்டத்தில் உறுதியாக இருந்தனர். போராட்டத்தின்போது அவர்கள் கருப்பு பட்டை அணிந்து இருந்தனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக அரியூர் கஸ்பா பகுதியை சேர்ந்த 110 பெண்கள், 140 ஆண்கள் நேற்று வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று ஓட்டுப்போட வில்லை. தேர்தலை புறக்கணித்த கிராம மக்களை சமாதானம் செய்ய வந்த அரசியல் பிரமுகர்களையும் திருப்பி அனுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.