

ஊட்டி,
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் கடந்த 1840-ம் ஆண்டு ஊட்டி நகர மக்களின் காய்கறி தேவைகளை பூர்த்தி செய்ய தோட்டம் உருவாக்கப்பட்டது. அன்றைய மெட்ராஸ் பிரஸிடென்சியின் ஆளுநர் மார்கி டுவிடேல் என்பவர் பொது பூங்காவாக மாற்றி அமைத்தார். 1848-ம் ஆண்டு மெக்ஜவர் என்ற ஆங்கிலேயர் மல்பெரி, சிவப்பு மற்றும் வெள்ளை நிற கமேலியா வகை செடிகளை நடவு செய்து பூங்காவை உருவாக்கினார். அவரை நினைவுகூறும் வகையில், மெக்ஜவர் பெரணி இல்லம் ஏற்படுத்தப்பட்டது.
இந்த பூங்கா இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த பாரம்பரியம் மிக்க பூங்காவாக திகழ்கிறது. கோடை சீசனை முன்னிட்டு, ஆண்டுதோறும் தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனை கண்டு ரசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் லட்சகணக்கானோர் வருகை தருகின்றனர். அதேபோல் இந்த ஆண்டு வருகிற மே மாதம் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
இதையொட்டி ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட மலர் விதைகள் நர்சரியில் வளர்க்கப்பட்டன. பின்னர் 230 வகையை சேர்ந்த மலர் செடிகள் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் நடவு செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பல வண்ண மலர் செடிகள் கொண்ட 15 ஆயிரம் பூந்தொட்டிகள் 3 மலர் மாடங்களில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. இந்த மலர் மாடங்களின் ஒருபுறத்தில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் பொருட்டு நடைபாதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையே பழமையான மலர் மாடங்கள் உயரம் மற்றும் அகலம் குறைவாக காணப்பட்டது. இதனால் அங்கு காட்சிக்கு வைக்கப்படும் மலர் செடிகளுக்கு போதிய வெளிச்சம், காற்று கிடைக்கவில்லை. அதன் காரணமாக பூந்தொட்டிகளை அவ்வப்போது மாற்றி அடுக்க வேண்டிய நிலை காணப்பட்டது. மேலும் ஆண்டுக்கு ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால், அவர்களின் வசதிக்காக இருபுறமும் நடைபாதை வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி, மலர் மாடங்களின் ஒருபுறத்தில் அலங்கார செடிகள் அகற்றப்பட்டன. பின்னர் குறுகிய நடைபாதையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கான்கிரீட் போட்டு சமப்படுத்தும் பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 2 மலர் மாடங்களின் உயரம் குறைவாக காணப்பட்டதால், அதன் மேற்கூரைகள் அகற்றப்பட்டது. பின்னர் ஒரு மீட்டர் உயரம் அதிகப்படுத்தி, பாலி கார்பனேட் சீட்டுகளை கொண்டு மேற்கூரை அமைக்கப்பட்டு வருகிறது. 3 மீட்டரில் இருந்து 4 மீட்டராக மேற்கூரை விரிவாக்கம் செய்யப்படுகிறது. பாலி கார்பனேட் சீட் மூலம் மலர் செடிகளுக்கு நல்ல வெளிச்சம் கிடைக்கும்.
மேலும் போதிய காற்றோட்டம் இருக்கும். இதுதவிர மலர் கண்காட்சியின் போது, சுற்றுலா பயணிகள் மலர் மாடங்களின் இருபுறமும் அமைக்கப்படும் நடைபாதையில் நடந்து சென்று பல்வேறு வகையான மலர்களை கண்டு ரசிக்கலாம். தோட்டக்கலைத்துறை சார்பில், ரூ.35 லட்சம் செலவில் நடைபாதை அமைத்தல் மற்றும் மலர் மாடங்களை விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது சுற்றுலா பயணிகளை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.