மாவட்டத்தில், மணல் தட்டுப்பாட்டால் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு

கடலூர் மாவட்டத்தில் மணல் தட்டுப்பாட்டால் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
Published on

கடலூர்,

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் தலைமையில் கடலூர் மாவட்ட அனைத்து லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வனை அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முழுவதும் ஆன்-லைன் முறையில் மணல் விற்பனை செய்வதன் மூலம் மணல் விலை குறையும் என்று தமிழக அரசு கூறியது. ஆனால் இப்போது 2 யூனிட் மணல் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. ஆகவே ஆன்-லைன் முறை தோல்வி அடைந்து விட்டது. கடலூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 2 ஆயிரத்துக்கும் அதிகமான லாரிகள், கடந்த 5 மாதங்களாக மணல் ஏற்றாமல் ஆன்-லைனில் பதிவு செய்ய முடியாமல் உள்ளன. இதனால் கடலூர் மாவட்டத்தில் மணல் தட்டுப்பாட்டால் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு எந்தவித வரியும் செலுத்தாத மாட்டு வண்டிகளுக்குக்கூட மாவட்ட அளவில் ஆன்-லைன் பதிவுமுறை உள்ளது. ஆனால் அரசுக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரி செலுத்தும் லாரிகளுக்கு, மாவட்ட அளவில் ஆன்-லைன் பதிவுமுறை இல்லாதது வேதனைக்குரியது.

எனவே கடலூர் மாவட்டத்தில் இயங்கும் மணல் குவாரிகளில், கடலூர் மாவட்ட லாரிகளுக்கு 50 சதவீதம் முன்னுரிமை அளிக்க வேண்டும் அல்லது கடலூர் மாவட்ட லாரிகளுக்கு தனி மணல்குவாரி அமைத்து தந்து, ஒரே சீரான மணல் விற்பனையை உறுதிப்படுத்த வேண்டும். இல்லையேல் வருகிற 12-ந்தேதி அனைத்து லாரிகளையும், ஆர்.சி.புத்தகம், பெர்மிட்டுடன் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கு இடம் ஒதுக்கி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com