திருவள்ளூர் மாவட்டத்தில் 2½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 207 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 2½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கலெக்டர் தகவல்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் போலியோ சொட்டு மருந்து வருகிற 19-ந் தேதி வழங்கப்படுவதையொட்டி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் வருகிற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 5 வயதுக்குட்பட்ட 2 லட்சத்து 50 ஆயிரத்து 207 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து 1268 நிலையான மையங்களிலும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களாக 55 மையங்களிலும், 50 நடமாடும் மையங்கள் மூலமாகவும் மொத்தம் 1,373 முகாம்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

மேலும் செங்கல் சூளை போன்ற இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இதில் சுகாதார பணியாளர்கள், சமூகநலத் துறை பணியாளர்கள், மாணவ- மாணவிகள், தன்னார்வ தொண்டர்கள் மற்றும் ரோட்டரி கிளப் தொண்டர்கள் என திருவள்ளூர் சுகாதார பகுதி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 955 நபர்களும், பூந்தமல்லி சுகாதார பகுதி மாவட்டத்தில் 908 நபர்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 863 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்த முகாமில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து பணிக்காக பிற துறையை சேர்ந்த 30 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளது. எனவே வருகிற 19-ந் தேதி அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து அளித்து குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் இந்த முகாம் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்குங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால், டாக்டர் பிரபாகரன், மாநில கண்காணிப்பு மருத்துவ அலுவலர் சுரேந்திரன், பூந்தமல்லி முதன்மை மருத்துவ அலுவலர் சாந்தி மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், திருவள்ளூர் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com