

இஸ்லமாபாத்,
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ். இவர் உளவு பார்த்ததாக கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரண தண்டனை உத்தரவிட்டது. இதை எதிர்த்து இந்தியா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கடந்த மாதம் 17-ஆம் தேதி உத்தரவிட்டது
சர்வதேச ஒப்பந்தங்களின்படி, குல்பூஷண் ஜாதவுக்கு அளிக்கப்பட வேண்டிய சட்டரீதியிலான உரிமைகளையும், தூதரக உதவிகளையும் காலதாமதமின்றி உடனடியாக அளிக்க வேண்டும் எனவும் பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது. இது தொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், குல்பூஷண் ஜாதவுக்கு வழங்கப்பட வேண்டிய தூதரக உதவிகளை வெள்ளிக்கிழமை அனுமதிக்க உள்ளோம். இது குறித்து, பாகிஸ்தானிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம் என்றார்.
இதுகுறித்து வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், 'பாகிஸ்தான் அளித்திருக்கும் அனுமதி குறித்து ஆய்வு செய்வோம். தூதரக ரீதியில் இந்த விவகாரத்தை அணுகுவோம்' என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஜாதவுக்கு தூதரக உதவிகள் அளிக்க, பாகிஸ்தான் நிபந்தனை எதையும் விதித்ததா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ரவீஷ் குமார் பதிலளிக்கையில், இந்த விவகாரத்தில், இரு நாட்டு அதிகாரிகள் விவாதித்த விஷயங்கள் குறித்து தற்போது எதுவும் தெரிவிக்க இயலாது என்றார்.