தெருநாய்கள் துரத்திய அதிர்ச்சியில்.. 12-ம் வகுப்பு மாணவர் மாரடைப்பால் பலி

நாய்கள் துரத்திய கடும் அதிர்ச்சியில் உறைந்த மாணவர், சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்தார்.
தெருநாய்கள் துரத்திய அதிர்ச்சியில்.. 12-ம் வகுப்பு மாணவர் மாரடைப்பால் பலி
Published on: 

மும்பை,

மும்பை அருகே தெருநாய்கள் துரத்தியதால் பயந்துபோய் கடையில் தஞ்சம் புகுந்த 12-ம் வகுப்பு மாணவர், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

மாணவரை துரத்திய தெருநாய்கள்

மும்பையை அடுத்த தானே மாவட்டம் பத்லாப்பூர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷல் ஷிண்டே (வயது 17). இவர் அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஹர்ஷல் ஷிண்டே டியூசன் வகுப்பிற்கு சென்றிருந்தார்.

கடைக்குள் தஞ்சம்

வகுப்பு முடிந்த பின்னர், அங்கிருந்து ஷானிநகர் பகுதி வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் நின்ற தெருநாய்கள் ஹர்ஷல் ஷிண்டேவை கண்டு ' ஆக்ரோஷமாக குரைத்தது. இதனால் பயந்து போன மாணவர், நாய்களிடம் இருந்து தப்பிக்க வேகமாக ஓடினார். உடனே அந்த தெருநாய்கள் கூட்டமாக மாணவரை விரட்டிச்சென்றன.

நாய்கள் துரத்தி வருவதை கண்ட மாணவர், உயிர் தப்பிப்பதற்காக அருகில் இருந்த கடை ஒன்றுக்குள் தஞ்சம் புகுந்தார்.

மயங்கி விழுந்தார்

ஆனால், நாய்கள் துரத்திய கடும் அதிர்ச்சியில் உறைந்த மாணவர், சில நிமிடங்களிலேயே கடைக்குள்ளேயே மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த கடைக்காரர் மற்றும் அங்கிருந்த நண்பர்கள் விரைந்து செயல்பட்டு தெரு நாய்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர். தொடர்ந்து, மயங்கி விழுந்த மாணவர் ஹர்ஷல் ஷிண்டேவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மாரடைப்பால் பலி

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் கூறுகையில், "உயிரிழந்த மாணவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தெருநாய்கள் துரத்தியதால் ஏற்பட்ட கடும் அதிர்ச்சியின் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம். எனினும், மரணத்திற்கான துல்லியமான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” என்றார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விபத்து மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X