மனைவி மீது தீராத காதல்.. 93 வயது முதியவருக்கு கிடைத்த இன்ப பரிசு

வயதான ஜோடி தங்கள் காதலை வெளிப்படுத்தி, அதற்கு அன்பு பரிசும் பெற்றிருக்கிறார்கள்.
மனைவி மீது தீராத காதல்.. 93 வயது முதியவருக்கு கிடைத்த இன்ப பரிசு
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டம் அம்போரா ஜஹாகிர் கிராமத்தில் உள்ள ஒரு எளிய விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் நிவ்ருத்தி ஷிண்டே. இவருக்கு 93 வயது ஆகிறது. இவரது மனைவி சாந்தாபாய். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இருப்பினும் வயதான தம்பதி தனித்தே தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

முதுமையை அடைந்தாலும் நிவ்ருத்தி ஷிண்டேவுக்கு தனது மனைவி மீதான காதலின் வயது மட்டும் இளமையாகவே இருந்தது. சமீபத்தில் இவர் தனது மனைவிக்கு ஒரு அன்பு பரிசு வழங்க விரும்பி சத்ரபதி சம்பாஜிநகரில் அமைந்துள்ள ஒரு நகைக்கடைக்கு மனைவியுடன் சென்றார்.

தங்க நகையின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகமாகிவிட்டதால், நகைக்கடை தற்போது பணக்காரர்கள் மட்டுமே வந்து செல்லும் இடமாக மாறிவிட்டது. எனவே பாரம்பரிய வெள்ளை வேட்டி, குர்தா மற்றும் தொப்பி அணிந்து வந்த முதியவரை பார்த்ததும், பிச்சை கேட்டு கடைக்குள் நுழைந்துவிட்டதாக நகைக்கடை ஊழியர்கள் நினைத்தனர்.

ஆனால் தன்னிடம் இருந்த ரூ.1,120-யை எடுத்து கொடுத்த முதியவர், அந்த பணத்தில் மனைவிக்கு, தாலி சங்கிலி தருமாறு கோரினார். அதனை தனது மனைவிக்கு ஆசையாக கொடுக்க விரும்புவதாக தெரிவித்தார்.

இதைக்கேட்டு நகைக்கடையில் இருந்த அனைவரும் உணர்ச்சிவசப்பட்டனர். குறிப்பாக நகைக்கடை உரிமையாளர் நெகிழ்ச்சி அடைந்தார். இந்த வயதிலும் இப்படி ஒரு காதல் ஜோடியா என்று அவர் மனம் உருகினார். எளிமையான மனிதரின் காதலுக்கு விலை உயர்ந்த தங்கத்தை பரிசாக வழங்க முன்வந்தார்.

எனவே நகைக்கடை உரிமையாளர் வயதான தம்பதியிடம் வெறும் ரூ.20 மட்டும் வாங்கிக்கொண்டு, தங்க தாலி சங்கிலியை அவர்களுக்கு பரிசாக வழங்கினார். இதனால் வயதான தம்பதியர் எல்லையில்லா மகிழ்ச்சி அடைய, இதனை காண்போர் நெஞ்சமும் நெகிழ்ந்தது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடக தளத்தில் மின்னல் வேகத்தில் வைரலானது. சுமார் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் இதை பார்வையிட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com