

திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் முதல்முறையாக ரூ.206 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க, வைர நகைகளை சென்னையைச் சேர்ந்த ஜெயின் தம்பதியினர் காணிக்கையாக வழங்கினர். அவர்களை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பாராட்டினார். தங்க, வைர நகைகளை காணிக்கையாக வழங்கிய ஜெயின் தம்பதியினருடன் இணைந்து முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு திருமலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“தினமும் ஏழுமலையானுக்கு 120 கிலோ தங்க நகைகள் அலங்காரமாக அணிவிக்கப்படுகின்றன. ஏழுமலையானின் ஆணைப்படியே 121 கிலோ தங்கம், வைர நகைகளை காணிக்கையாக சமர்ப்பித்ததாக ஜெயின் தம்பதியினர் தெரிவித்திருப்பது அவர்களின் ஆழ்ந்த பக்திக்குச் சான்றாகும்.
பண்டைய காலத்தில் பல்லவர்கள், சோழர்கள், சேரர்கள், பாண்டியர்கள் மட்டுமின்றி மைசூரு, மராட்டிய மன்னர்களும் கோவிலின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி உள்ளனர். விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் ஏழுமலையானுக்கு ரத்தினக் கிரீடம், பீதாம்பரம் உள்ளிட்ட பல்வேறு ஆபரணங்களை காணிக்கையாக வழங்கி உள்ளார். கிருஷ்ணதேவராயர் முதல் ஜெயின் தம்பதியினர் வரை ஏழுமலையான் மீதான பக்தியும் நம்பிக்கையும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
ஜெயின் தம்பதியினரைப் போல மற்ற செல்வந்தர்களும் முன்வந்து ஏழை மக்க ளின் நலன், சமூக சேவை, ஆன்மிகப் பணிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை வழங்க வேண்டும். பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் ஒவ்வொரு ரூபாயும் அவர்களின் வசதிகள், சேவைகளுக்காகவே தேவஸ்தானத்தால் செலவிடப்ப டுகின்றன.
உலகில் ஏராளமான கோடீஸ்வரர்களும், பெரும் செல்வந்தர்களும் இருந்தாலும், தாங்கள் சம்பாதித்த செல்வத்தைச் சமூக நலனுக்காகச் சிறப்பாக பயன்படுத்தும் வாய்ப்பு சிலருக்கே கிடைக்கிறது. அந்த வகையில், தங்களின் கொடை உள்ளத்தை வெளிப்படுத்திய சென்னையைச் சேர்ந்த வர்தமான் ஜெயின்-ராதிகா ஜெயின் தம்பதியினர் முன்னுதாரணமாக திகழ்கின்றனர். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.”
இவ்வாறு அவர் கூறினார்.