பெண் விமானிகளே இயக்கும் விமானம் - இந்திய விமான வரலாற்றில் சாதனை

இந்திய விமான வரலாற்றில் சாதனையாக, சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருவுக்கு பெண் விமானிகளே இயக்கும் விமானம் இயக்கப்பட உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்திய விமான வரலாற்றில் சாதனை நிகழ்வாக, முழுவதும் பெண் விமானிகளை கொண்டு, சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருவுக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்படுகிறது.

இந்த விமானம் நேற்று உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டது. இது வடதுருவத்தின் மேலே சென்று, அட்லாண்டிக் பாதையில் பயணித்து, உலகின் மற்றொரு முனையான கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 3.45 மணிக்கு வந்து அடைகிறது.

இந்த விமானம்தான், ஏர் இந்தியா அல்லது இந்தியாவில் வேறு எந்த விமான நிறுவனத்தாலும் இயக்கப்படும் உலகின் மிக நீண்ட வணிக விமானம் என்றும், இந்த பாதையில் மொத்த விமான நேரம், குறிப்பிட்ட நாளில் காற்றின் வேகத்தை பொறுத்து 17 மணி நேரத்துக்கும் மேலாக இருக்கும் என்றும் ஏர் இந்தியா கூறுகிறது.

இரண்டு எதிர் எதிர் முனையில் உள்ள சான்பிரான்சிஸ்கோ, பெங்களூரு நகரங்கள் இடையேயான தூரம், 13 ஆயிரத்து 993 கி.மீ. ஆகும்.

இந்த விமான பயணம் குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப் பூரி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ஏர் இந்தியாவின் பெண்கள் சக்தி உலகம் முழுவதும் உயர பறக்கிறது என பெருமிதப்பட்டு உள்ளார்.

மேலும், முழுமையாக பெண்களை கொண்ட விமானி அறையில், கேப்டன் சோயா அகர்வால், கேப்டன் பாபகரி தன்மாய், கேப்டன் அகன்ஷா சோனாவேர், கேப்டன் சிவானி மன்ஹாஸ் ஆகியோர் இருந்து, இந்த வரலாற்று தொடக்க விமானத்தை இயக்குவார்கள் எனவும் அவர் கூறி உள்ளார்.

இதையொட்டி ஏர் இந்தியா விடுத்துள்ள அறிக்கையில், கேப்டன் சோயா அகர்வால் 8 ஆயிரம் மணி நேரத்துக்கும் அதிகமாக பறந்த அனுபவமும், பி-777 விமானத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கட்டளை அனுபவமும் கொண்ட திறமையான விமானி என கூறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com