பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திருத்தம் என்பது காலத்தின் கட்டாயம் - பிரதமர் மோடி

பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.
பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திருத்தம் என்பது காலத்தின் கட்டாயம் - பிரதமர் மோடி
Published on: 

புதுடெல்லி,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை (30-ம் தேதி) கூடவிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

33 சதவீத இடஒதுக்கீடு மசோதா

அதாவது, மக்களவை நாளையும் (திங்கள் கிழமை) மாநிலங்களவை டிசம்பர் 2ஆம் தேதியும் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை மசோதா, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.

பெண்கள் சக்தி

இந்நிலையில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திருத்தம் என்பது காலத்தின் கட்டாயம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

பெண்கள் சக்திக்கு பங்கேற்பு அளிப்பதற்கான போராட்டம் பல ஆண்டுகளாக தொடர்கிறது. பல ஆண்டுகளாக, இதை நடைமுறைப்படுத்த முயன்றவர்களில் நானும் ஒருவன். பெண்கள் அதிகாரமளித்தலுக்கான பாஜக-என்டிஏ கூட்டணியின் உறுதிமொழி அப்படியே உள்ளது. எங்களைப் பொறுத்தவரை, தேசிய நலனே முதன்மையானது.

ஆனால், ஒரு சிலருக்கு, தேசிய நலனை விட கட்சி நலனே எல்லாமே  என்று ஆகிவிடும்போது, ​​பெண்கள் அதிகாரமளித்தலும், தேசிய நலனும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திருத்தம் காலத்தின் கட்டாயமாகும்.

இவ்வாறு அதில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா என்ற 2026-ம் ஆண்டுக்கான அரசியலமைப்பின் 131வது திருத்த சட்ட மசோதாவை மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்த போது தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த அந்த மசோதாவை முறியடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

X