அமராவதிக்கு பதிலாக ஆந்திர பிரதேச தலைநகர் விசாகப்பட்டினத்துக்கு மாற்றம்: சட்ட சபையில் மசோதா தாக்கலாகிறது

ஆந்திர பிரதேசத்தின் தலைநகர் அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு மாற்றப்படுகிறது. இதற்கான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது.
அமராவதிக்கு பதிலாக ஆந்திர பிரதேச தலைநகர் விசாகப்பட்டினத்துக்கு மாற்றம்: சட்ட சபையில் மசோதா தாக்கலாகிறது
Published on

விஜயவாடா,

ஒன்றுபட்ட ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர், ஆந்திராவின் தலைநகராக அமராவதி தேர்வு செய்யப்பட்டது. எனவே அமராவதியை சர்வதேச தரத்தில் அமைப்பதற்கு முந்தைய சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேச அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஆனால் கடந்த மே மாதம் அங்கு புதிய அரசை அமைத்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் ஜெகன்மோகன் ரெட்டி, அமராவதியை தலைநகராக கட்டமைத்த பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக முந்தைய அரசு மீது குற்றம் சாட்டினார். சந்திரபாபு நாயுடுவுக்கு நெருங்கியவர்களுக்கே முக்கியமான பகுதிகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.

மேலும் ஆந்திராவின் தலைநகரை மாற்ற விரும்பிய ஜெகன்மோகன் ரெட்டி, அரசு நிர்வாகத்துக்கு விசாகப்பட்டினம், சட்டமன்றத்துக்கு அமராவதி, நீதித்துறைக்கு கர்னூல் என 3 தலைநகரங்களை உருவாக்க முடிவு செய்தார்.

அதன்படி மாநிலத்தின் தலைநகரை மாற்றுவது தொடர்பாக பரிந்துரைகளை அளிப்பதற்கு 2 குழுக்களை அவர் அமைத்தார். இந்த குழுக்கள் தங்கள் அறிக்கையை முதல்-மந்திரியிடம் அளித்துவிட்டன. இந்த அறிக்கைகளை மந்திரிகள், அரசு அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழு ஒன்று ஆய்வு செய்து ஜெகன்மோகன் ரெட்டியிடம் அறிக்கை அளித்துள்ளது.

இதைத்தொடர்ந்து மாநில தலைநகரை அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு மாற்ற ஜெகன்மோகன் ரெட்டி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மசோதா (தலைநகர் பரவலாக்க மசோதா) ஒன்றை அரசு உருவாக்கி உள்ளது. இதை நிறைவேற்றுவதற்காக சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) முதல் 3 நாட்களுக்கு நடக்கிறது.

முன்னதாக இன்று காலையில் மந்திரிசபை கூட்டம் நடைபெறுகிறது. அதில் இந்த மசோதாவுக்கு முறைப்படி ஒப்புதல் வழங்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து கவர்னரின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்படும். அவரது ஒப்புதல் பெற்று சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

175 உறுப்பினர்களை கொண்ட ஆந்திர சட்டசபையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு 151 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் மசோதா எளிதில் நிறைவேறி விடும் என தெரிகிறது.

இதற்கிடையே ஆந்திராவின் தலைநகரை மாற்றும் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. முதல்-மந்திரியின் இந்த முடிவை எதிர்த்து மாநிலம் முழுவதும் இன்று போராட்டமும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தெலுங்குதேசம் கட்சியும் ஆதரவு தெரிவித்து உள்ளது.

தலைநகரை மாற்றும் நடவடிக்கைக்கு முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்குதேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அளித்த பேட்டியில் அவர் கூறும்போது, ஆந்திர பிரதேசம் அழிவின் பாதையில் செல்கிறது. மாநிலத்தின் தலைநகரை மாற்றினால் ஏற்கனவே போடப்பட்டுள்ள சுமார் ரூ.50 ஆயிரம் கோடி முதலீடுகள் வெளியேறி விடும். மாநிலம் ஏற்கனவே கடனில் மூழ்கி இருக்கும் நிலையில், இது மேலும் பேரிடியாக அமைந்து விடும் என்று கூறினார்.

அமராவதியை கட்டமைக்கும் பணிகளில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு உரிமை உண்டு எனக்கூறிய சந்திரபாபு நாயுடு, ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் கடந்த பின்னரும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com