அயோத்தி வழக்கின் தீர்ப்பு: பொறுமையை கையாண்ட மக்களுக்கு நன்றி - பிரதமர் மோடி வானொலியில் பேச்சு

அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியான பிறகு பொறுமையுடனும், முதிர்ச்சியுடனும் நடந்து கொண்ட நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அயோத்தி வழக்கின் தீர்ப்பு: பொறுமையை கையாண்ட மக்களுக்கு நன்றி - பிரதமர் மோடி வானொலியில் பேச்சு
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில், அகில இந்திய வானொலியின் மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

நேற்று அவர் அந்நிகழ்ச்சியில் பேசியதாவது:

கடந்த 9-ந் தேதி, அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பை அனைவரும் இருகரம் நீட்டி வரவேற்றுள்ளனர். 130 கோடி மக்களும் தங்களுக்கு தேசநலனே மேலானது என்று நிரூபித்துள்ளனர். பொதுமக்கள், சுமுகமாகவும், அமைதியாகவும் தீர்ப்பை ஏற்றுக்கொண்டனர்.

குறிப்பாக, அவர்கள் காட்டிய பொறுமை, சுயகட்டுப்பாடு, முதிர்ச்சி ஆகியவற்றுக்காக அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒருபுறம், சட்ட போராட்டம் முடிவடைந்தது. மற்றொரு புறம், நீதித்துறை மீதான மரியாதை அதிகரித்துள்ளது.

நீதித்துறை வரலாற்றில் இந்த தீர்ப்பு ஒரு மைல்கல் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தீர்ப்புக்கு பிறகு, நாடு புதிய பாதையில் நடைபோடத் தொடங்கி இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், தேசிய மாணவர் படை மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது, நீங்கள் அரசியல்வாதி ஆகி இருக்காவிட்டால், என்ன ஆகி இருப்பீர்கள்? என்று ஒரு மாணவர் கேட்டார்.

அதற்கு பிரதமர் மோடி கூறியதாவது:-

இப்போது இது ஒரு கடினமான கேள்வி. ஒவ்வொரு குழந்தையும், வாழ்க்கையில் பல கட்டங்களை தாண்டி செல்கிறது. சில நேரம், அதுவாக ஆக விரும்புகிறது, சில நேரம் இதுவாக ஆக விரும்புகிறது.

ஆனால், நான் அரசியலில் நுழைய விரும்பியதே இல்லை, அதுபற்றி சிந்தித்ததும் இல்லை என்பதுதான் உண்மை. இப்போது அரசியல்வாதி ஆகிவிட்டதால், நாட்டு நலனுக்கு என்னால் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட முடியும் என்று மட்டுமே நான் சிந்தித்து வருகிறேன். அரசியல்வாதி ஆகியிருக்காவிட்டால், என்ன ஆகியிருப்பேன் என்ற சிந்தனையே என் மனதில் வராது. நான் எங்கிருந்தாலும், அந்த பணிக்காகவே என்னை அர்ப்பணித்துக் கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

டி.வி. பார்ப்பதற்கும், புத்தகம் படிப்பதற்கும் நேரம் கிடைக்கிறதா? என்ற கேள்விக்கு பிரதமர் மோடி கூறியதாவது:-

எனக்கு சினிமா பார்ப்பதில் ஆர்வம் அதிகம் இல்லை. டி.வி.யும் குறைவாகவே பார்ப்பேன். ஆனால், புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்தது. இருப்பினும், இப்போது என்னால் படிக்க முடியவில்லை.

கூகுள் இருப்பதால், ஏதேனும் தகவல் தேடுவதற்கு, எளிய வழிமுறையாக அதை பயன்படுத்திக் கொள்கிறேன். இதனால், புத்தகம் படிப்பது உள்ளிட்ட எனது பழக்கங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினைதான். இவ்வாறு அவர் கூறினார்.

என்.சி.சி.யில் பணியாற்றிய அனுபவம் குறித்து கேட்டதற்கு பிரதமர் மோடி கூறியதாவது:-

நான் என்.சி.சி. மாணவனாக இருந்தபோது, தண்டிக்கப்பட்டதே இல்லை. ஏனென்றால் அவ்வளவு ஒழுக்கமாக இருந்தேன். ஆனால், காற்றாடி நூலில் மாட்டிக்கொண்ட ஒரு பறவையை விடுவிப்பதற்காக நான் மரத்தில் ஏறியபோது, என்னை தவறாக புரிந்து கொண்டார்கள்.

எனக்கு தண்டனை கிடைக்கும் என்று சிலர் நினைத்தனர். பிறகு உண்மையை உணர்ந்து என்னை பாராட்டினர். இவ்வாறு மோடி கூறினார்.

டிசம்பர் 7-ந் தேதி கொடி நாள் கொண்டாடப்படுவதையொட்டி, நாட்டு மக்கள் தாராளமாக நன்கொடை வழங்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com