

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், பல்வேறு அமைப்புகள் சார்பில் பொது இடங்களிலும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து நவதானியங்கள், மலர்களால் அலங்கரித்து தீவிர வழிபாடு நடத்தி வருகிறார்கள்.இந்த சிலைகள் ஒரு வாரம் முதல் 15 நாட்கள் வரை பந்தல்களில் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகளுடன் உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு பெங்களூருவில் மிகவும் விலையுயர்ந்த விநாயகர் சிலை ஒன்று வடிவமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மல்லேசுவரம் மில்க் காலனி பகுதியில், ‘ஸ்வஸ்திகா யுவகர சங்கம்’ சார்பில் இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்த விநாயகர் சிலை முழுவதும் விலைமதிப்பற்ற அமெரிக்கன் வைரங்கள், முத்துகள், நவரத்தினங்கள் மற்றும் பவளங்களால் பார்த்து பார்த்து உருவாக்கப்பட்டுள்ளது. கண்ணை கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையின் மொத்த மதிப்பு ரூ.14 லட்சம் ஆகும்.
மராட்டிய மாநிலம் சோலாப்பூரைச் சேர்ந்த திறமையான கைவினை கலைஞர்கள் 3 மாதங்கள் இரவு-பகலாக கடினமாக உழைத்து இந்த அற்புதமான சிலையை உருவாக்கி உள்ளனர்.சுமார் 5 அடி உயரமும், 700 கிலோ எடையும் கொண்ட இந்த விநாயகர் சிலை, பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
இந்த அரிய வைர விநாயகர் சிலையை மல்லேசுவரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வந்து ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து, சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
அமெரிக்க வைரம் என்பது இயற்கையாக வெட்டி எடுக்கப்படும் உண்மையான வைரம் அல்ல. இது ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்படும் ஒரு வகையான கியூபிக் சிர்கோனியா கல் ஆகும்.