அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் நிறுத்திவைப்பு

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் நிறுத்திவைப்பு
Published on

டெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

இந்த சம்மனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் 20ம் தேதி விசாரணைக்கு வந்தபோது கெஜ்ரிவால் மீதான சட்ட நடவடிக்கைக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது.

இதையடுத்து, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே, நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக கெஜ்ரிவாலுக்கு மே 11ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அதன்பின்னர், ஜூன் 2ம் தேதி திகார் சிறையில் கெஜ்ரிவால் ஆஜரானார்.

இதையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி நியாய் பிந்து, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது. ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து கெஜ்ரிவால் இன்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ கோர்ட்டு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி கோர்ட்டு, கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்தி வைத்தது.

அமலாக்கத்துறை தரப்பு மனுவை விசாரித்து முடிக்கும்வரை கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவன்யூ கோர்ட்டு வழங்கிய ஜாமீன் நிறுத்தி வைக்கப்படுவதாக டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, கெஜ்ரிவால் இன்று மாலை சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என தகவல் வெளியான நிலையில் தற்போது ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டதால் அவர் தொடர்ந்து திகார் சிறையிலேயே இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.    

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com