

பாட்னா,
பீகார் மாநிலம் பாட்னாவில் கங்கை நதிக்கரை அருகே வெங்கடாஜலபதி சுவாமி திருக்கோவில் ஒன்றை கட்டுவதற்காக திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கு சுமார் 15 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு இன்று பீகார் முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரியை நேரில் சந்தித்து, கோவில் கட்டுவதற்கு நிலம் வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.
கோவிலுடன் சேர்த்து தெப்பக்குளம், திருமண மண்டபம் மற்றும் ஆன்மிக யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தேவையான கட்டுமானங்களை கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
வெங்கடாஜலபதி சுவாமியின் பெருமையை நாடு முழுவதும் பரப்பும் நோக்கிலும், இந்து சனாதன தர்ம நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவும், அனைத்து மாநில தலைநகரங்களில் கோவில்கள் கட்டும் பணியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளது. முன்னதாக, காம்ரூப் மாவட்டத்தில் கோவில் கட்டுவதற்காக 10.3 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு அசாம் அரசு ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.