

புதுடெல்லி,
இந்திய பார் கவுன்சில் நியமனம் செய்த நிபுணர்கள் குழுவானது பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் பணியை தொடரலாமா என்பது தொடர்பாக முடிவு எடுக்கிறது. இதுதொடர்பாக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் என 500 பேருக்கு இந்திய பார் கவுன்சில் நோட்டீஸ் விடுக்க திட்டமிட்டு உள்ளது. இந்த நிபுணர்கள் குழுவில் இடம் பெற்று உள்ள வழக்கறிஞர் மன்னன் குமார் மிஷ்ரா ஆங்கில மீடியாவிற்கு அளித்து உள்ள பேட்டியில், நோட்டீஸ் அனுப்ப முடிவு எடுக்கப்பட்டு உள்ளது, இந்திய பார் கவுன்சில் அவர்களுடைய பதிவை ரத்து செய்தால், அவர்களால் இயற்கை நீதிக்கான கொள்கை மீறப்பட்டது என்று கூற முடியாது, என்று கூறிஉள்ளார்.
இதுதொடர்பான நோட்டீஸ் நாளை செய்தித்தாள்களில் வெளியாகும், அவர்கள் ஒரு வாரத்திற்குள் அவர்களுடைய பதிலை தெரிவிக்க வேண்டும். இவ்விவகாரம் தொடர்பாக இறுதி விசாரணையானது ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் தலைவர் கபில் சிபல், அபிஷேக் மானு சிங்வி, கேடிஎஸ் துளசி, பி சிதம்பரம், விவேக் தான்கா, கே பராசரன், பூபேந்திர யாதவ், மீனாட்சி லேகி, பினாகி மிஷ்ரா, சதிஷ் மிஷ்ரா மற்றும் அஸ்வினி குமார் ஆகியோர் ரேடாரின் கீழ் உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.