

பெங்களூரு,
பெங்களூருவில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் மாண விகள் ஜான்வி (வயது 20), வைஷ்ணவி (20). இவர்கள் உள்பட மொத்தம் 6 பேரும் சேர்ந்து துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகாவில் நடைபெற்ற செயல்முறை வகுப்பு ஒன்றில் கலந்து கொள்ள, பெங்களூருவில் இருந்து, குனிகலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கார் மாகடி தாலுகா குடேமரனஹள்ளி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தறிகெட்டு ஓடியது. பின்னர், சாலை யோரம் இருந்த மரம் ஒன்றின் மீது கார் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இதன் இடிபாடுகளில் சிக்கிய ஜான்வி மற்றும் வைஷ்ணவி ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும், அவர்களுடன் பயணித்த 4 மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.