பிரதமர் மோடி பற்றி அவதூறு: மெட்டா இந்தியா தலைவர் மீது வழக்குப்பதிவு

பிரதமர் மோடி குறித்து அவதூறான, தவறான தகவல்களை பரப்பியதாக பா.ஜ.க. புகார் தெரிவித்திருந்தது.
பிரதமர் மோடி பற்றி அவதூறு: மெட்டா இந்தியா தலைவர் மீது வழக்குப்பதிவு
Published on

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி பற்றி சமூக வலைதளங்களில் ஆட்சேபகரமான வீடியோவை பகிர்ந்ததாக இந்தியாவுக்கான மெட்டா தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டங்களின் போது பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த உள்ளடக்கங்கள் தொடர்பாக, இந்தியாவுக்கான மெட்டா தலைவர் அருண் நிவாஸ் மீது ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி

முன்னதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தின்போது பிரதமர் மோடி குறித்து அவதூறான, தவறான தகவல்களை பரப்பியதாக பாஜக புகார் தெரிவித்திருந்தது. இதன்படி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ​​பிரதமரை ஆபாசமாகவும், இழிவாகவும், தவறாக வழிநடத்தும் வகையிலும் சித்தரிக்கும் பல உருமாற்றப்பட்ட மற்றும் டிஜிட்டல் முறையில் கையாளப்பட்ட வீடியோக்களையும் படங்களையும் கண்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

வழக்குகள் பதிவு

மேலும், இத்தகைய உள்ளடக்கம் பொதுமக்களை தவறாக வழிநடத்தவும், தவறான தகவல்களை பரப்பவும், வெறுப்பு அல்லது பொது அமைதியின்மையை தூண்டவும், பொது ஒழுக்கத்தை குலைக்கவும், பொது நபர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவும் அல்லது அவர்களின் கண்ணியத்தை அவமதிக்கவும், பொது அமைதியை குலைக்கவும், சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே பகைமையை வளர்க்கவும், சட்டத்தின் பொருந்தக்கூடிய விதிகளை மீறவும் வாய்ப்புள்ளது என்று புகார்தாரர்கள் தெரிவித்திருந்தனர். அந்த புகார்களின் அடிப்படையில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

'மெட்டா' நிறுவனம்

29 வயதான தொழிலதிபர் எஸ்.அரவிந்த் ரெட்டி மற்றும் தெலுங்கானா பா.ஜ.க. செயற்பாட்டாளர் டி.சாய்கிரண் கௌட் ஆகியோர் இந்தப் புகார்களை பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக இந்த வாரத் தொடக்கத்தில், பிரதமர் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்ட ஒரு காணொளி பேஸ்புக்கில் சிறிது நேரம் முடக்கப்பட்டதை தொடர்ந்து, 'மெட்டா' நிறுவனத்திற்கு அரசாங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது.

மெட்டா (Meta) குழுவினர் இந்த வார இறுதியில் அரசாங்க பிரதிநிதிகளைச் சந்திப்பார்கள் என்றும், அப்போது சமூக வலைதள கட்டுப்பாடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com