

புதுடெல்லி,
காவிரி நீர் ஒழுங்காற்று குழு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுப்படி காவிரியில் தண்ணீரை திறந்து விடாமல், உத்தரவை மீறிய கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அவசர மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:- “கடந்த 24-ம் தேதி, 1,652 கன அடி; 25-ம் தேதி, 1,853 கன அடி; 26-ம் தேதி 1,642 கன அடி; 27-ம் தேதி, 32 கன அடி நீர் என்ற குறைந்த அளவில்தான் தமிழகத்திற்கு கர்நாடகா தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இந்த நான்கு நாட்களில், 3,851 கன அடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பெங்களூரின் அடுத்த ஏழு மாத கால குடிநீர் தேவைக்கு அதிகபட்சமாக, 14 டி.எம்.சி. நீரே தேவைப்படும்.
ஆனால் கர்நாடகா 43 டி.எம்.சி., தேவைப்படுவதாக கூறுவது தமிழகத்திற்குரிய விகிதாசார பங்கை மறுப்பதற்காக கூறப்படும் மிகைப்படுத்தப்பட்ட காரணம். வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும், ஜனவரி வரை பயிர்களை காப்பாற்ற பிலிகுண்டுலுவில் உரிய நீர் வருவது மிகவும் அவசியம்.
காவிரி ஆணையத்தின் உத்தரவுகளை தொடர்ச்சியாக மறுப்பது, சட்டப்பூர்வ கடமையிலிருந்து விலகுவதோடு, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும் அவமதிக்கும் செயல். எனவே, காவிரி ஆணையத்தின் உத்தரவை உடனடியாக அமல்படுத்த கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும். நிலுவையில் உள்ள, 3,851 கன அடி நீர் பற்றாக்குறையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
நவம்பர் 6-ம் தேதி வரை தினமும், 3,000 கன அடி நீர் பிலிகுண்டுலுவுக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்திற்கு விகிதாசார அடிப்படையில் வந்து சேர வேண்டிய முந்தைய நிலுவையில் உள்ள நீரை கர்நாடகா வழங்க ஏதுவாக கடந்த 23-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை, மறுபரிசீலனை செய்யும்படி ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.