தமிழகத்துக்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

ஜூன், ஜூலை மாதத்திற்கு மொத்தமாக 40 டிஎம்சி காவிரி நீர் தேவை என தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
தமிழகத்துக்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
Published on

புதுடெல்லி,

40 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

52-வது கூட்டம்

காவிரி நதி நீர் பங்கீட்டில் கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளம் ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே சுமூக தீர்வு காண்பதற்காக சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்கப்பட்டன. இந்த 2 அமைப்புகளும் மாதம்தோறும் கூடி நீர் பங்கீட்டு பிரச்சினைகள் பற்றி ஆலோசிக்கின்றன.

4 மாநிலங்களுக்கு அழைப்பு

அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில் இதுவரை 51 கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் 52-வது கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் நடத்தப்படுகிறது. ஆணைய அலுவலகத்தில் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க மேற்கண்ட 4 மாநிலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமோ கலந்து கொள்ளலாம்.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹெல்தர் தலைமையில் 52 வது கூட்டம் டெல்லியில் இன்று பிற்பகல் தொடங்கியது. கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரியை சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழக நீர்வளத் துறை செயலாளர் சத்யபிரதா சாகு, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் பங்கேற்றனர்.

40 டி.எம்.சி. தண்ணீர்

கூட்டத்தின்போது, நீர்தேக்கங்களில் குறைந்த அளவே நீர் இருப்பதாக கர்நாடகா கூறியது. இதற்கு தமிழகம் தரப்பில் ‘கோடை காலங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக நீரை கர்நாடகா பயன்படுத்திவிட்டு, நீர்தேக்கங்களில் குறைந்த அளவே நீர் இருப்பதாக கூறுவதை ஏற்கமுடியாது’ என தெரிவித்தது. அத்துடன் ஜூன், ஜூலை மாதத்திற்கு மொத்தமாக 40 டிஎம்சி காவிரி நீர் தேவை என தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, ஜூன் மாதத்திற்கு 9.19 டிஎம்.சி, ஜூலை மாதத்திற்கு 31.24 டிஎம்.சி என மொத்தம் 40 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com