டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் இன்று நடக்கிறது

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் நடக்கிறது.
டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் இன்று நடக்கிறது
Published on

புதுடெல்லி,

தமிழகத்துக்கு காவிரி நீரை பெற்றுத்தர மாநில அரசு நீண்ட நெடிய சட்டப்போராட்டத்தை மேற்கொண்டது. இதன் பலனாக காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் சில மாற்றங்கள் செய்து சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பை வழங்கியது.

அதன் அடிப்படையில் காவிரியோடு தொடர்புடைய கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் காவிரி நீரை பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் மேற்படி 4 மாநிலங்களும் தலா ஒரு பிரதிநிதியை தங்களது சார்பில் நியமித்து உள்ளன.

இதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி கூடி ஆலோசனை நடத்தியது. முன்னதாக ஒழுங்காற்று குழு கூட்டம் கடந்த ஆகஸ்டு 9-ந் தேதி நடந்தது. அதற்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு கூட்டம் ஆகியவை இதுவரை நடத்தப்படவில்லை.

தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக வருகிற ஜூன் 12-ந் தேதி காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் அதுகுறித்து ஆணையம் இதுவரை எந்த உத்தரவையும் வெளியிடவில்லை. இதனால் தமிழக விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதைப்போல காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டமும் டெல்லியில் வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பருவமழை தவறியதால் தமிழ்நாட்டில் விவசாயிகள் பாசனத்துக்கு காவிரி நீரை பெரிதும் நம்பி இருக்கின்றனர். எனவே இந்த ஒழுங்காற்று குழு கூட்டத்தில் காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. அதே நேரம் கர்நாடகாவில் கடுமையான வறட்சி நிலவுவதாக அந்த மாநில அரசு கூறிவருகிறது.

இதனால் இந்த 2 கூட்டங்களும் இரு மாநிலங்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com