

புதுடெல்லி,
நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (CJP) அமைப்பின் கோரிக்கைகளுக்கு இணக்கமான தீர்வைக் காண்பதற்காக, அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர்களான சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோருடன் மத்திய மந்திரிகள் ஜிதேந்திர சிங் மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் இன்று( வெள்ளிக்கிழமை, ஜூலை 24) டெல்லியில் உள்ள விட்டல்பாய் படேல் இல்லத்தில் சந்தித்தனர்.
இதனைத்தொடர்ந்து மத்திய மந்திரிகள் ஜெ.பி.நட்டா, ஜிதேந்திர சிங்குடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய பேச்சு வார்த்தை நிறைவடைந்தது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா, “தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை குறித்து முடிவெடுக்க, நாளை மதியம் வரை அரசு அவகாசம் கோரியுள்ளது. அவர் விரைவில் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று நாங்கள் நம்புகிறோம். அதேவேளையில், இழப்பீடு வழங்குதல் (தற்கொலை செய்துகொண்ட நீட் தேர்வு விண்ணப்பதாரர்களின் குடும்பங்களுக்கு) மற்றும் மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகள் (FIR) மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளுக்கும் அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது” என்று கூறினார்.
அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது மற்றும் சமீபத்திய தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்குப் போதுமான இழப்பீடு வழங்கப்படும் ஆகிய இரண்டு நிபந்தனைக்குட்பட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, சி.ஜே.பி. பேச்சுவார்த்தையில் ஈடுபட ஒப்புக்கொண்டது.
மத்திய அரசுடன் இன்று நடைபெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கல்வி மந் திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் அல்லது அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) வலியுறுத்தி உள்ளநிலையில், மாணவர் போராட்டங்கள் தொடரும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய மந் திரி ஜெ.பி.நட்டா, “சி.ஜே.பி. பிரதிநிதிகள் உடனான சந்திப்பு 2 மணி நேரம் நீடித்தது. தேர்வுகள் தொடர்பாக அவர்களிடம் 3 முக்கிய கோரிக்கைகளும், 5 சீர்திருத்தப் பரிந்துரைகளும் இருந்தன. அவர்களின் கோரிக்கைகளை கேட்டுப் பெற்றுள்ளோம். நாளை (ஜூலை 25) அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். அப்போது அரசாங்கத்திற்குள் நடைபெற்ற விவாதம் குறித்த விவரங்களை தெரிவிப்பதாக அவர்களிடம் கூறியுள்ளோம்” என்று தெரிவித்தார்.
முன்னதாக தனது முக்கிய கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் அளித்த உறுதிகளைத் தொடர்ந்து, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது 26 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவில் முடித்துக்கொண்ட சில மணிநேரங்களுக்கு பிறகு இந்தக் கூட்டம் நடைபெற்றது.
ஏற்கனவே வாய்மொழி உறுதிகள் அளிக்கப்பட்டபோதிலும், தான் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணத்தை வலியுறுத்தியதாலேயே போராட்டத்தை முடித்துக்கொள்வதில் இரண்டு நாட்கள் தாமதம் ஏற்பட்டதாக சோனம் வாங்சுக் தெரிவித்திருந்தார்.