

புதுடெல்லி,
நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் ஹெச்பிவி தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 9 மாதங்களுக்குள் 1 கோடிக்கும் அதிகமான சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்தாவது:
கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் ஹெச்பிவி (HPV- Human Papilloma Virus) தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 9 மாதங்களுக்குள் 1 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி 2026 பிப்ரவரியில் ஹெச்பிவி தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதன் கீழ் 14 வயதுடைய சிறுமிகளுக்கு அரசுப் பொது சுகாதார நிலையங்களில் பெற்றோரின் ஒப்புதலுடன் இலவசமாக, பாதுகாப்பான முறையில் ஒரே ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆண்டுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 1.2 கோடி சிறுமிகளில் 87 சதவீதத்தினருக்குத் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது 1 கோடிக்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
குஜராத், உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், மிசோரம், மத்தியப்பிரதேசம், பீகார் ஆகிய 6 மாநிலங்களில் 100 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 29.33 லட்சம், பீகாரில் 13.70 லட்சம், குஜராத்தில் 7.75 லட்சம் சிறுமிகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 76.12 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது.
யு-வின் (U-WIN) இணையதளம் மூலம் தடுப்பூசி முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், முன்பதிவு செய்யவும், சான்றிதழ்களைப் பதிவிறக்கவும் முடியும். பயிற்சி பெற்ற மருத்துவர்களின் கண்காணிப்பில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எஞ்சியுள்ள தகுதியான சிறுமிகளுக்கும் தடுப்பூசி செலுத்தி, கருப்பை வாய் புற்றுநோயை முழுமையாகத் தடுக்கும் இலக்கை அடைய மத்திய அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.