டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது தடியடி: ஐகோர்ட்டில் நாளை விசாரணை

போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது தடியடி: ஐகோர்ட்டில் நாளை விசாரணை
Published on

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற கரப்பான் பூச்சி கட்சியினரை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.

போராட்டம்

'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இவர்களது போராட்டத்துக்கு பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஆதரவு தெரிவித்தார். அத்துடன் அவர்களது போராட்ட இடத்திலேயே உண்ணாவிரதத்தையும் தொடங்கினார். கரப்பான் பூச்சி கட்சியினரின் கோரிக்கைகளுடன் லடாக் தொடர்பான சில கோரிக்கைகளையும் அவர் வலியுறுத்தினார்.

இந்தநிலையில் கடந்த 18-ந்தேதி அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் போலீசார் அவரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினார்கள். அவர் டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பேரணி

அவர் போராட்டக்களத்தில் இருந்தபோது, மக்களவை தொடங்கும் நாளில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல இருப்பதாக தெரிவித்து இருந்தார். ஆனால் போலீசார் அவரை வெளியேற்றி விட்டனர்.

இருந்தாலும் அதே நாளில் பேரணியை நாங்கள் நடத்துவோம் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே அறிவித்தார்.

அதன்படி நேற்று அவர்கள் பேரணிக்கு தயார் ஆனார்கள். இதனை முன்னிட்டு துணை ராணுவப்படை நேற்று அதிகாலை அங்கு அதிகளவில் குவிக்கப்பட்டது. அதிவிரைவு படையினரும் குவிக்கப்பட்டனர்.

மெட்ரோ ரெயில்நிலையங்கள் மூடல்

போராட்டத்தில் கலந்து கொள்ள பல இடங்களில் இருந்தும் மாணவர்கள், இளைஞர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதால் நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள மத்திய செயலகம், சேவா தீர்த்தம், பட்டேல் சவுக், ராஜீவ் சவுக் மற்றும் ஜன்பத் ஆகிய 5 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் பயணிகள் சிரமப்பட்டனர்.

ஆனாலும் இளைஞர்கள் வெவ்வேறு வழிகளில் ஜந்தர் மந்தர் பகுதியை அடைந்து விட்டனர். ஜந்தர் மந்தரை சுற்றியுள்ள சாலைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர். அப்போது லேசாக மழையும் பெய்தது. ஆனால் இளைஞர்கள் இதனை பொருட்படுத்தாமல் வந்து கொண்டே இருந்தனர். இதனைத்தொடர்ந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது.

தடியடி

பேரணி, நாடாளுமன்றத்தை நெருங்கி விடாமல் இருக்க வழியில் போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து இருந்தனர். இளைஞர் பட்டாளம் அதனை தாண்டி குதிக்க முயன்றது. உடனே போலீசார் அவர்களை எச்சரித்தனர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.

இதனைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். ஒரு இடத்தில் தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் பலர் பயந்து ஓடினார்கள். சிலர் போலீசாரை தட்டிக்கேட்டனர். அவர்கள் பின்னர் குண்டு கட்டாக தூக்கிச் செல்லப்பட்டனர்.

நுழைவு வாயில்கள் மூடல்

இந்த தடியடி நாடாளுமன்றம் போலீஸ் நிலையம் தெரு பகுதியில் நடந்தது. அங்கிருந்து கலைந்து ஓடிய இளைஞர்கள் அந்த பகுதியில் உள்ள மேலும் சில வழிகளை பயன்படுத்தி புதிய நாடாளுமன்ற கட்டிடம் அமைந்துள்ள ரெயில் பவன் சந்திப்புக்கு வந்தனர். நாடாளுமன்றத்தை ஒட்டி அவர்கள் வந்து விட்டதால் பரபரப்பு அதிகமானது. இதனைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தின் வெளிப்புற நுழைவு வாயில்கள் மூடப்பட்டன.

போராட்டக்காரர்களை கலைந்து போகுமாறு போலீசார் அறிவுறுத்தினர். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

கண்ணீர் புகைக்குண்டு

எவ்வளவு சொல்லியும் போராட்டக்காரர்கள் கேட்காததால் அவர்களை நோக்கி போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினார்கள்.

இதனால் கூட்டம் சிதறி ஓடியது. இதனை பயன்படுத்தி போலீசார் முழு கூட்டத்தையும் விரட்டினர். நாடாளுமன்றத்தைச் சுற்றி கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதற்கிடையே மத்திய அரசின் அழைப்பின் பேரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ், அசுதோஸ் ரங்கா ஆகியோர் சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவிடம் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். போராட்ட கோரிக்கை தொடர்பான மனுவையும் அளித்தனர்.

சோனம் வாங்சுக்

பின்பு ஜந்தர் மந்தர் உண்ணாவிரதத்தில் சோனம் வாங்க்சுக்கோடு சேர்ந்து உண்ணாவிரதம் இருந்த மேலும் சில மாணவர்கள் நேற்று உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

சோனம் வாங்க்சுக்கும் நேற்றைய போராட்டத்தில் பங்கேற்க தன்னை விடுவிக்குமாறு ஆஸ்பத்திரி இயக்குனருக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் டாக்டர்கள் அவரை அனுமதிக்கவில்லை.

டெல்லியில் இளைஞர்களின் நேற்றைய போராட்டம் அதன்பேரில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜந்தர்மந்தர் பகுதி போர்க்களம் போல காட்சி அளித்தது. இந்த போராட்டத்தில் 50 போலீசார் காயம் அடைந்தனர்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

ரூ.1 கோடி இழப்பீடு

போராட்டம் தொடர்பாக மத்திய மந்திரி ஜே.பி.நட்டாவை சந்தித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகள் அளித்த மனுவில் 3 கோரிக்கைகளை தெரிவித்து இருந்தனர்.

அதன்படி, ஆஸ்பத்தியில் இருக்கும் சோனம் வாங்சுக்கை உடனடியாக விடுவிக்க வேண்டும், கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்க வேண்டும், நீட் தேர்வு முறைகேட்டால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவ- மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

இதை பெற்றுக்கொண்ட மத்திய மந்திரி ஜே.பி.நட்டா, இது குறித்து அரசின் உயர்மட்ட அளவில் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பதாக உறுதியளித்தார்.

நாளை விசாரணை

இந்நிலையில் டெல்லியில் போராடியவர்கள் மீது துணை ராணுவப்படை நடத்திய தாக்குதலுக்கு எதிரான மனு நாளை (ஜூலை 22ம் தேதி) விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நாடாளுமன்றம் நோக்கி சென்றவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் என டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அவசரமாக விசாரிக்கக்கோரி மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்ட நிலையில் நாளை விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com