அர்னாப் புயல்: சேதங்களை மதிப்பீடு செய்ய மத்தியக் குழுவை நியமிக்க வேண்டும் - அமித்ஷாவிடம் சந்திரபாபு நாயுடு கோரிக்கை

கோதாவரி டெல்டா கடற்கரையோர பகுதிகளில் அர்னாப் புயலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
அர்னாப் புயல்: சேதங்களை மதிப்பீடு செய்ய மத்தியக் குழுவை நியமிக்க வேண்டும் - அமித்ஷாவிடம் சந்திரபாபு நாயுடு கோரிக்கை
Published on: 

அமராவதி,

அர்னாப் புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்ய மத்தியக் குழுவை நியமிக்க வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.

புயல் கரையைக் கடக்கத் தொடங்கியவுடன் ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களில் இரவு விடியவிடிய பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. காகிநாடா நகரில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அர்னாப் புயல்

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன் தினம் நிலவிய ‘அர்னாப் புயல்’ தீவிர புயலாக மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. தொடர்ந்து அர்னாப் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை ஆந்திராவின் காகிநாடா மற்றும் புதுச்சேரியின் ஏனாம் கடற்கரை பகுதிகளில் மிக தீவிர புயலாக கரையை கடக்க தொடங்கியது. அதன் மையப்பகுதி கரையை முழுவதும் கடக்க சுமார் 1 மணிநேரம் ஆனது.

புயல் கரையைக் கடக்கத் தொடங்கியவுடன் ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களில் இரவு விடியவிடிய பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. காகிநாடா நகரில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அமித்ஷாவுக்கு கடிதம்

இந்நிலையில், அர்னாப் புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்ய மத்தியக் குழுவை நியமிக்க வேண்டும் என ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;-

சேதங்கள்

“ஆந்திர மாநிலத்தில் அர்னாப் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக, மாநில சாலைகளில் 220-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. கடலோர மாவட்டங்களின் சில பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. பல்வேறு பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டது.

கோனசீமா மாவட்டத்தில் சுமார் 80 வீடுகள் சேதமடைந்துள்ளன. கனமழையால் 70,900 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்களும், 10,450 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைப் பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கோதாவரி டெல்டா கடற்கரையோரம் மற்றும் கிருஷ்ணா, அனகாபள்ளி மாவட்டங்களில் அர்னாப் புயலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

சீரமைப்பு பணிகள்

பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம், சாலைகளை சீரமைப்பது, சுகாதாரத்தை பராமரிப்பது ஆகிய பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

மத்தியக் குழு

அர்னாப் புயல் மீட்புப் பணிகளுக்காக, வரும் நாட்களில் தேவைக்கேற்ப தேசிய பேரிடர் மீட்புப் படை(NDRF) மற்றும் பிற மத்திய முகமைகளின் ஆதரவை தொடர்ந்து வழங்க வேண்டும். புயல் பாதிப்புகள் குறித்து மாநில அரசு தனது விரிவான மதிப்பீட்டை சமர்ப்பித்தவுடன், சேதங்களை மதிப்பீடு செய்ய ஒரு மத்தியக் குழுவை விரைவில் நியமிப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com