மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை இலங்கை பயணம்

பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட குழுவும் இலங்கைக்கு செல்கிறது.
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை இலங்கை பயணம்
ராஜ்நாத் சிங்
Published on

புதுடெல்லி,

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை இலங்கைக்கு செல்கிறார். இது தொடர்பாக, மத்திய தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

ஆலோசனை

பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நாளை மூன்று நாள் அரசுமுறை பயணமாக இலங்கைக்கு செல்கிறார். இப்பயணத்தின் போது, பாதுகாப்புத்துறை மந்திரி, இலங்கைத் தலைவர்களுடன் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனைகளை நடத்துவதோடு, கொழும்பில் உள்ள இந்திய வம்சாவளியினருடனும் கலந்துரையாடுகிறார். அவருடன், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட குழுவும் இலங்கைக்கு செல்கிறது.

வர்த்தக ஒத்துழைப்பு

இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிக பிணைப்புகளையும், பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பன்முக ஒத்துழைப்பையும் பகிர்ந்து கொள்கின்றன.

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய பொருளாதார உதவியும், 2025-ல் இலங்கையில் ஏற்பட்ட தித்வா புயலின் போது மீட்பு பணிகளில் களமிறங்கிய முதல் நாடுகளில் ஒன்றாக இந்தியா உதவிக்கரம் நீட்டியதும் இவ்விருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளன. இது, 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற கொள்கை மீதான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கிறது.

இருதரப்பு உறவுகள்

பாதுகாப்புத்துறை அமைச்சரின் இந்தப் பயணம் இந்தியா - இலங்கை இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com