டெல்லியில் கேங்ஸ்டர் ஜோடியின் திருமணம்.. கோட்டையாக மாறிய பார்ட்டி ஹால்: 200 போலீஸ் பாதுகாப்பு

திருமணத்திற்காக பரோலில் வந்த கேங்ஸ்டர் சந்தீப், தப்பிச் சென்றுவிடாதபடி போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
டெல்லியில் கேங்ஸ்டர் ஜோடியின் திருமணம்.. கோட்டையாக மாறிய பார்ட்டி ஹால்: 200 போலீஸ் பாதுகாப்பு
Published on

புதுடெல்லி:

டெல்லியில் நடைபெற்ற கேங்ஸ்டர் ஜோடியின் திருமணம் மற்றும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பல்வேறு கொலை வழக்குகள் மற்றும் பணம் பறிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்தீப் என்ற காலா ஜாதேடிக்கும், பெண் தாதாவான அனுராதா என்ற மேடம் மின்ஸ் என்பவருக்கும் இன்று திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமணத்திற்காக சந்தீப்புக்கு இன்று 6 மணி நேரம் பரோல் வழங்கப்பட்டிருந்தது.

டெல்லியின் துவாரகா செக்டார்-3, சந்தோஷ் கார்டனில் உள்ள ஒரு பார்ட்டி ஹாலில் இன்று பிற்பகல் திருமணம் நடைபெற்றது திருமணத்தையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள், உள் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. 

200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக பரோலில் வரும் கேங்ஸ்டர் சந்தீப் தப்பிச் சென்றுவிடாதபடி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

பார்ட்டி ஹாலுக்கு வருவோரை பரிசோதனை செய்வதற்காக, மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்ட நுழைவு வாயில் அமைக்கப்பட்டிருந்தது. ஆயுதம் தாங்கிய போலீசார் நிறுத்தப்பட்டனர். அப்பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டன. டிரோன்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டது.

இந்த திருமணத்தில் கலந்துகொள்ளும் விருந்தினர்கள் 150 பேர் கொண்ட பட்டியலை கேங்ஸ்டர் சந்தீப்பின் குடும்பத்தினர், காவல்துறையிடம் வழங்கி உள்ளனர். அவர்களை முழுமையாக பரிசோதனை செய்தபிறகே பார்ட்டி ஹாலுக்குள் அனுமதித்தனர்.

இந்த அலங்காரங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளால் அந்த பார்ட்டி ஹால் கிட்டத்தட்ட கோட்டை போன்று மாறியிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com