பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது - டெல்லி அரசு அதிரடி

பழைய வாகனங்களை கண்டறிய பெட்ரோல் பங்க்குகளில் நவீன கேமரா பொருத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் புதிதாக பதவியேற்றுள்ள பா.ஜனதா அரசு, பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களை வழங்குவதில்லை என கடந்த மாதம் அறிவிப்பை வெளியிட்டது.

இதன்படி 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் சி.என்.ஜி. வாகனங்களை கண்டுபிடிப்பதற்காக பெட்ரோல் பங்க்குகளில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவும் பணி தொடங்கப்பட்டது.

ஏப்ரல் 1-ந் தேதி முதல் எரிபொருள் மறுக்கும் திட்டத்தை தொடங்க அரசு திட்டமிட்டது. ஆனால் குறித்த அந்த காலத்துக்குள் அதனை செயல்படுத்த முடியவில்லை. காரணம், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி இன்னும் முடிவடையவில்லை. இதனால் பணியை முழுமையாக முடித்து இந்த மாத இறுதியில் இருந்து பெட்ரோல், டீசல் வழங்க தடை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதாக சுற்றுச்சூழல் துறை மந்திரி மஞ்ஜிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மொத்தம் 500 பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி. நிலையங்கள் உள்ளன. இவற்றில் 372 பெட்ரோல் பங்க்குகளிலும், 105 சி.என்.ஜி. நிலையங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. மீதமுள்ள நிலையங்களில் விரைவில் பொருத்தப்பட்டு விடும். அதன் பிறகு திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை மந்திரி மஞ்ஜிந்தர் சிங் சிர்சா கூறுகையில், "இந்த திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம். ஒரு பெட்ரோல் பங்க்கில் அதை செயல்படுத்தி, மற்றொரு பங்க்கில் செயல்படுத்தாவிட்டால் இந்த திட்டத்தால் என்ன பயன்? எனவேதான், அனைத்து இடங்களிலும் கேமரா பொருத்தப்பட்டவுடன் திட்டத்தை செயல்படுத்துவது என முடிவு எடுத்து இருக்கிறோம்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com