புதிய தொகுதி மறுவரையறை மசோதா: தமிழகத்தில் நாடாளுமன்ற, சட்டசபை தொகுதிகள் எவ்வளவு அதிகரிக்கும் தெரியுமா?

பெண்களுக்கான தொகுதிகள் எவ்வளவு உயரும் என்பதும் தெரியவந்துள்ளது.
புதிய தொகுதி மறுவரையறை மசோதா: தமிழகத்தில் நாடாளுமன்ற, சட்டசபை தொகுதிகள் எவ்வளவு அதிகரிக்கும் தெரியுமா?
Published on: 

டெல்லி,

புதிய தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தால், தமிழகத்தில் நாடாளுமன்ற, சட்டசபை தொகுதிகள் எவ்வளவு அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், பெண்களுக்கான தொகுதிகள் எவ்வளவு உயரும் என்பதுவும் தெரியவந்துள்ளது.

புதிய தொகுதி மறுவரையறை மசோதா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முறைப்படி முடித்து வைக்கப்படாத நிலையில், சிறப்புக் கூட்டத் தொடர் 30-ந் தேதி (திங்கட்கிழமை) கூட இருக்கிறது. இந்தக் கூட்டத் தொடரில், தொகுதி மறுவரையறை மசோதா, மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஆகியவை மீண்டும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

இந்த நிலையில், புதிய தொகுதி மறுவரையறை மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

முக்கிய அம்சங்கள் என்ன?

* அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மக்களவை மற்றும் சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்த வழிவகை செய்யும்.

* 2051-ம் ஆண்டு வரை மக்கள்தொகையின் அடிப்படையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதத்தில் மாற்றம் இருக்காது. மகளிர் இடஒதுக்கீடு (33 சதவீதம்) சட்டத்தை உடனடியாக அமல்படுத்த இது வழிவகுக்கும்.

* மக்களவையின் மொத்த இடங்கள் 850 ஆகவும், மாநிலங்களில் சட்டசபையின் (ஒரு மாநிலத்தின்) அதிகபட்ச வரம்பு 650 ஆகவும் உயர்த்தப்படும்.

* 2029-ம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே புதிய தொகுதி மறுவரையறை வரைபடம் தயாரிக்கப்படும்.

* மாநில வாரியான தொகுதிகளின் பிரதிநிதித்துவம் 1971-ம் ஆண்டு மக்கள்தொகையின் படியே தீர்மானிக்கப்படும்.

பெண்களுக்கு 33 சதவீத இடங்கள்

* 2011-ம் ஆண்டு மக்கள்தொகையின் படி, மாநிலத்திற்குள்ளான தொகுதிகளின் எல்லைகள் மாற்றியமைக்கப்படும்.

* நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டசபைகளில் 33 சதவீதம் இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். இது 15 ஆண்டுகள் அமலில் இருக்கும்.

இவ்வாறு புதிய தொகுதி மறுவரையறை மசோதாவில் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் நாடாளுமன்ற, சட்டசபை தொகுதிகள் எவ்வளவு?

புதிய தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தால், தமிழகத்தில் சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 351 ஆக (ஏற்கனவே உள்ளது 234) உயரும். மேலும், இதில் பெண்களுக்கான தொகுதிகள் 116 ஆக அதிகரிக்கும். அதேபோல், நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் 59 (தற்போது இருப்பது 39) ஆகவும் கூடும். இதில், பெண்களுக்கான தொகுதிகள் 20 ஆக இருக்கும்.

X