

புதுடெல்லி,
குற்ற வழக்குகளில், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக தகுதி இழப்பு ஆவதுடன், அவர்கள் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. இந்நிலையில், லோக் பிரஹாரி என்ற தொண்டு நிறுவனம், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீதான குற்றவாளி என்ற தீர்ப்புக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தாலும் கூட அவர்களது பதவிக்கு மீண்டும் உயிரூட்டக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்தனர்.
அதில், குற்றம் நிரூபணம் ஆனதால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மேல்முறையீட்டில், குற்ற நிரூபணத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டால், அவர்களது பதவி மீண்டும் உயிர் பெறும். எந்த குற்ற நிரூபணத்தால் பதவி இழந்தார்களோ, அந்த குற்ற நிரூபணத்துக்கு தடை விதிக்கப்படும்போது, அவர்கள் பதவியை பெறுவதுதான் சரியானது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.