‘பிரிந்து கிடந்த சமஸ்தானங்களை ஒருங்கிணைத்தவர்’ - சர்தார் வல்லபாய் படேலுக்கு மோடி புகழாரம்

சர்தார் வல்லபாய் படேல், பிரிந்து கிடந்த சமஸ்தானங்களை ஒருங்கிணைத்தவர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
‘பிரிந்து கிடந்த சமஸ்தானங்களை ஒருங்கிணைத்தவர்’ - சர்தார் வல்லபாய் படேலுக்கு மோடி புகழாரம்
Published on

புதுடெல்லி,

இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தின் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை அருகே, 597 அடியில் (பீடம் உள்பட சிலையின் மொத்த அடி 787) பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டு உள்ள உலகிலேயே மிக உயரமான இந்த சிலையை, பிரதமர் மோடி நாளை மறுநாள் (புதன்கிழமை) திறந்து வைக்க இருக்கிறார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது மன் கி பாத் (மனதின் குரல்) உரையில், பிரிந்து கிடந்த சமஸ்தானங்களை ஒருங்கிணைத்தவர் சர்தார் வல்லபாய் படேல் என கூறி அவருக்கு புகழாரம் சூட்டினார்.

இது பற்றி பிரதமர் மோடி பேசியதாவது:-

ஒருங்கிணைந்த இந்தியாவை நம்மால் இப்போது பார்க்க முடிகிறது என்றால், அதற்கு சர்தார் வல்லபாய் படேலின் புத்திகூர்மையும், திறமையும் முழு முதற் காரணமாகும்.

மாநிலங்களில் ஏற்படக் கூடிய திடீர் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கு தீர்வு காணும் திறன் சர்தார் வல்லபாய் படேலுக்கு மட்டுமே இருந்ததாக மகாத்மா காந்தி கருதினார். பிரிந்து கிடந்த சமஸ்தானங்களை ஒருங்கிணைந்த பெருமை அவரையே சாரும்.

வருகிற 31-ந்தேதி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளன்று ஒற்றுமையின் சிலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் அவருக்கு உண்மையான மரியாதை வழங்கப்படுகிறது.

இதுவே உலகின் மிக உயரமான சிலை. இந்திய மண்ணில் உலகிலேயே மிக உயரமான சிலையை காண்பதன் மூலம் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள முடியும். இந்த சிலை ஒரு புதிய மற்றும் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக தடம் பதிக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.

31-ந்தேதி இந்தியா முழுவதும் ஒற்றுமை ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நேற்று (நேற்று முன்தினம்) காலாட்படை தினம் கொண்டாடப்பட்டது. ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க காலாட்படை ஆற்றிய அரும்பணியை மறந்துவிட முடியாது. இதிலும் சர்தார் வல்லபாய் படேலின் பங்களிப்பு உள்ளது என்பதை நினைவுகூர்வோம்.

வருகிற 31-ந்தேதி மற்றொரு முக்கிய தினமும் கூட. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு தினம். அவருக்கு நாம் மதிப்பு மிக்க மரியாதையை செலுத்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com