

பெங்களூர்,
கர்நாடக மாநிலத்தில் டி.கே. சிவக்குமார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது மந்திரி சபையில் பொதுப்பணித்துறை இலாகாவை கவனித்து வருபவர் சதீஷ் ஜார்கிஹோலி.
இந்த நிலையில் கர்நாடக பொதுப்பணித்துறை மந்திரி சதீஷ் ஜார்கிஹோலி வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தினார்கள். பெங்களூரில் உள்ள டாலர்ஸ் காலனி பகுதியில் அவரது இல்லம் இருக்கிறது. இங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இது தவிர அவரது மகள் பிரியங்கா ஜார்கிஹோலியின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள். பிரியங்கா சிக்கோடி தொகுதி எம்.பி. ஆவார்.
கர்நாடக மந்திரி சதீஷ் ஜார்கிஹோலி, அவரது மகள், மைத்துனர் மஞ்சுநாத் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்கள் உட்பட மொத்தம் 18 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளிநாட்டு முதலீடு குறித்த சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர் பாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, இது ஒரு புதிய விசாரணையாகும். மந்திரி சதீஷ் ஜார்கிஹோலி மைந்துனரும் கலால் துறை அதிகாரியுமான மஞ்சுநாத் சம்பந்தப்பட்ட வழக்கிற்கும். இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது சதீஷ் ஜார்கிஹோலிக்கு எதிரான தனிப்பட்ட பணமோசடி வழக்கு' என்றார்.
அமலாக்கத் துறையின் சோதனைக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து கர்நாடக மந்திரி பிரியங்க் கார்கே கூறியதாவது:-
சதீஷ் ஜார்கி ஹோலி மீதான சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது. எதிர்க் கட்சி தலைவர்களுக்கு எதிரான பெரும்பாலான சோதனை தன் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாகும். புள்ளி விவரத்தை பார்த்தால் இது தெரியும்.
196 சோதனைகள் நடைபெற்று உள்ளது. ஆனால் இரண்டே இரண்டு தண்டனை மட்டுமே கிடைத்து உள்ளது. அவர்கள் அடுத்த தேர்தலை பா.ஜ.க. தலைவர்களை கொண்டு நடத்த விரும்பவில்லை. மாறாக சி.பி.ஐ., வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை ஆகியவற்றை கொண்டே நடத்த விரும்பு கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.