நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை கோரிக்கை நிராகரிப்பு

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை கோரிக்கை நிராகரிப்பு
Published on: 

புதுடெல்லி,

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்டுக்கு சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரித்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இவ்வழக்கில், ரூ.752 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் மற்றும் பங்குகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. அவற்றை விடுவிக்கக்கோரி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சொத்து முடக்கத்தில் தற் போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிடக்கோரி, டெல்லி ஐகோர்ட்டை அமலாக்கத்துறை அணுகியது.

இவ்வழக்கு நீதிபதி சச்சின் தத்தா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு ஆஜராகி, 'முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க வேண்டுமென குற்றம்சாட்டப்பட்டோர் தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ளனர். ஆதலால் இந்த நிலையிலேயே அதற்கு தடைபோட வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

இதை நீதிபதி ஏற்கவில்லை. இதுகுறித்து நீதிபதி கூறியபோது, அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை எடுத்து கொள்ள விசாரணை நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இறுதி முடிவெடுப்பதாகவும், இதில் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்றும் கூறினார்.

இதற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, டெல்லி ஐகோர்ட்டின் இந்த உத்தரவை பயன்படுத்தி முடக்கப்பட்ட சொத்துக்களை குற்றம்சாட்டப்பட்டோர் திரும்ப பெறக்கூடும் என்றும், எனவே அமலாக்கத்துறையின் மேல்முறையீடு மீது முடிவெடுக்கும் வரை தற்போதைய நிலையே தொடர உத்தரவிட வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை வைத்தார். அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்றும், இறுதி விசாரணைக்கு பிறகே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் திட்டவட்டமாக கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com