இந்தியா - பாகிஸ்தான் சிறைக்கைதிகள் பட்டியல் பரிமாற்றம்

ஆண்டுதோறும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் இரு நாடுகளும் கைதிகள் பட்டியலை பரிமாறுவது கட்டாயமாகும்
இந்தியா - பாகிஸ்தான் சிறைக்கைதிகள் பட்டியல் பரிமாற்றம்
Published on

இஸ்லாமாபாத்,

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள், ஒருவரது நாட்டில் மற்றொருவர் சிறையில் உள்ள கைதிகள் மற்றும் மீனவர்களின் பட்டியலை இன்று பரிமாறிக்கொண்டன. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இருதரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரு நாடுகளும் தூதரக வழிகள் மூலம் கைதிகள் பட்டியலை பரிமாறிக்கொண்டன.

கடந்த 2008-ம் ஆண்டு மே 21-ந் தேதி கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்படி, ஆண்டுதோறும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் இரு நாடுகளும் கைதிகள் பட்டியலை பரிமாறுவது கட்டாயமாகும்.அதன்படி, பாகிஸ்தான் அரசு, அந்நாட்டில் சிறையில் உள்ள 250 இந்திய கைதிகளின் பட்டியலை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் வழங்கியுள்ளது. இதில் 52 பொதுமக்கள் மற்றும் 198 இந்திய மீனவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய சிறைகளில் உள்ள 439 பாகிஸ்தான் அல்லது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் கைதிகளின் பட்டியலை பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கியுள்ளது. இதில் 386 பொதுமக்கள் மற்றும் 53 மீனவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தண்டனை காலத்தை நிறைவு செய்து, பாகிஸ்தான் குடியுரிமை உறுதி செய்யப்பட்டுள்ள 97 பாகிஸ்தான் கைதிகளை (64 பொதுமக்கள், 33 மீனவர்கள்) உடனடியாக விடுவித்து தாய்நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியாவை கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com