

புதுடெல்லி,
தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், 3 நாள் பயணமாக இன்று (நவம்பர் 13) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை நேரில் சந்தித்துப் பேசினார்.
தமிழக கவர்னர் அர்லேகர், கடந்த வாரம் டெல்லி சென்றிருந்தபோது அமித் ஷாவை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், அப்போது அமித் ஷா டெல்லியில் இல்லாததால் இந்தச் சந்திப்பு நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், மீண்டும் டெல்லி சென்ற கவர்னர் அர்லேகர், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, தமிழகத்தில் நடைபெற்று வரும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான விவரங்களை அமித் ஷாவிடம் கவர்னர் எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பான அறிக்கையையும் மத்திய உள்துறை மந்திரியிடம் சமர்ப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின முழுநேர கவர்னராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக கவர்னர் அர்லேகர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கவர்னர் அர்லேகரின் பயணத் திட்டத்தின்படி, இன்று டெல்லியில் இருந்து ஜம்மு செல்ல உள்ளார். அங்கு தனது நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு 14-ந்தேதி மீண்டும் டெல்லி திரும்புகிறார். இதைத்தொடர்ந்து, 3 நாள் பயணத்தை நிறைவு செய்துவிட்டு நவம்பர் 15-ந்தேதி மாலை சென்னை திரும்புகிறார்.
தமிழகத்தின் அரசியல் சூழல் மற்றும் சட்டம்-ஒழுங்கு விவகாரங்களுக்கு மத்தியில், கவர்னர் அர்லேகர் அமித்ஷாவை சந்தித்துப் பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.