

மும்பை,
தலைமை தேர்தல் ஆணையரை உடனடியாக பணிநீக்கம் செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்-மந்திரியும், சிவசேனா (யுபிடி) கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை சில முடிவுகள் மற்றும் உத்தரவுகளுக்கு ஆட்சேபனை தெரிவித்ததாக தனியார் நாளிதழ் ஒன்றில் செய்திகள் வெளியாகியிருந்தன. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவது, வாக்காளர் தரவுத்தளத்தை கையாள்வது உள்ளிட்ட விவகாரங்களில் அவர்கள் கேள்வி எழுப்பியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் புயலை கிளப்பியது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக செய்திகள் வெளியானநிலையில், இதற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் மகாராஷ்டிர முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையரை உடனடியாக பணிநீக்கம் செய்து சிறையில் அடைக்க வேண்டும். ஞானேஷ் குமாரின் செயல்பாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்காக தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷிக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் உண்மையான முகம் தற்போது வெளியே வந்துள்ளது. தேர்தல் ஆணையம் எடுத்த அனைத்து தவறான முடிவுகளையும் அந்த இரு தேர்தல் ஆணையர்களும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
நீதிமன்றமும் இந்த விவகாரத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நாட்டின் ஜனநாயகத்தைக் காக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். மகாராஷ்டிரா, மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் அதிகார வெறிக்காக இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்குப் பிறகு தேர்தல் நடைபெற்ற மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே நடைபெற்ற சட்டசபை தேர்தல்களை ரத்து செய்துவிட்டு, அந்த மாநிலங்களில் வாக்குச்சீட்டுகளை பயன்படுத்தி மறுதேர்தல் நடத்த வேண்டும். நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மக்களின் வாக்குக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்"
இவ்வாறு அவர் கூறினார்.