சட்டவிரோத பணப்பரிமாற்றம்: ஆயிரக்கணக்கான கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை

இந்த நிறுவனத்தின் சார்பில் செயல்பட்டு வந்த ஆன்லைன் சூதாட்ட செயலிகள் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தடை செய்யப்பட்டு உள்ளது.
அமலாக்கத்துறை
Published on

பெங்களூரு,

ஆன்லைன் செல்போன் செயலி மற்றும் இணையதளம் வாயிலாக 'கேம்ஸ்கார்ட் டெக்னாலஜீஸ் நிறுவனம்' ஏராளமான சூதாட்ட செயலிகளை நடத்தி வருகிறது. இதன்மூலம் பல கோடி ரூபாய் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக எழுந்த புகாரின்பேரில் அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில் 'கேம்ஸ்கார்ட்' நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களுக்கு சொந்தமான கர்நாடக உள்பட பல்வேறு இடங்களில் உள்ள ரூ.1.906 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

அமலாக்கத்துறை

அதன்படி வங்கி கணக்குகளில் இருக்கும் தொகை, நிரந்தர வைப்புத்தொகை, பரஸ்பர நிதி, கடன் பத்திரங்கள், பங்குகள், பண்ணை வீடுகள், ஏராளமான வீடுகள் மற்றும் வீட்டு மனைகள், வணிக கட்டிடங்கள் உள்ளிட்ட பல சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனத்தின் சார்பில் செயல்பட்டு வந்த ஆன்லைன் சூதாட்ட செயலிகள் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தடை செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிறுவனம் சட்டவிரோதமாக பணம் சம்பாதித்து மட்டுமின்றி, கவர்ச்சிகரமான விளம்பரங்களை அறிவித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இவ்வாறாக மட்டும் ரூ.1,035 கோடியை அவர் சம்பாதித்து இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

முடக்கம்

ஏற்கனவே இவ்வழக்கில் ரூ.495 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன. அவற்றில் ரூ.11 லட்சம் ரொக்கம். 2 கிலோ 300 கிராம் தங்க நகைகள் முடக்கப்பட்டு இருந்தது. தற்போது முடக்கப்பட்டு உள்ள சொத்துக்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் ரூ.2,401 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறையினர் இவ்வழக்கில் முடக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com