

புதுடெல்லி,
இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டாட் மெக்லே ஆகியோர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அதில் தெரிவித்திருப்பதாவது:-
“இன்று கையெழுத்திடப்பட்ட இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், நமது வளர்ச்சிக் கூட்டாண்மைக்கு முன்னெப்போதும் இல்லாத உத்வேகத்தை அளிக்கும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது நமது இரு நாடுகளையும் பிணைக்கும் ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் இலட்சியத்தைப் பிரதிபலிக்கிறது.
இந்த ஒப்பந்தம் நமது விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கைவினைஞர்கள், புத்தொழில் நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் புதுமையாளர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும். இது வளர்ச்சிக்குப் புதிய வழிகளைத் திறந்து, வாய்ப்புகளை உருவாக்கி, பல்வேறு துறைகளில் நமது ஒருங்கிணைப்பை ஆழப்படுத்தும்.
நியூசிலாந்தின் 20 பில்லியன் டாலர் முதலீட்டு உறுதிப்பாடு, விவசாயம், உற்பத்தி, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கும் வளமான மற்றும் ஆற்றல்மிக்க எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.