இந்தியாவின் கலாசார பாரம்பரியத்துக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் அதிகரிப்பு: பிரதமர் மோடி

மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசிய கலை மையம் இந்த மாநாட்டை நடத்துகிறது
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on: 

இந்தியாவின் இசை, நடனம், சினிமா மற்றும் உணவு வகைகள் உலக நாடுகளுடன் இந்தியாவைத் தொடர்ந்து இணைத்து வருகின்றன. இந்தியாவின் கலாசார பாரம்பரியத்துக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் அதிகரித்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ‘பிருஹத்தர் பாரத்’ என்ற சர்வதேச மாநாடு நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய மாநாடு நாளை மறுநாள் வரை நடைபெறுகிறது. இந்த மாநாடு குறித்து பிரதமர் மோடி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இந்த மாநாடு, உலக நாடுகளுடனான இந்தியாவின் கலாசாரத் தொடர்புகளை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது. இந்தியாவின் நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதுடன், நாட்டின் பழமையான கையெழுத்துப் பிரதிகளையும் ‘ஞான பாரதம்’ திட்டத்தின் மூலம் பாதுகாத்து வருகிறது. வெளிநாடுகளில் உள்ள இந்தியப் பழங்காலப் பொருட்களை மீட்டுக் கொண்டுவரும் முயற்சிகளும் மீண்டும் வேகமடைந்துள்ளன. இந்தியாவின் கலாசாரப் பாரம்பரியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் அதிகரித்து வருகிறது” என்றார்.

மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசிய கலை மையம் இந்த மாநாட்டை நடத்துகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், தூதர்கள் மற்றும் அறிஞர்கள் பங்கேற்று, உலக நாடுகளுடனான இந்தியாவின் வரலாற்று மற்றும் சமகால கலாசாரத் தொடர்புகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com